திருக்கார்த்தியல் - ராம் தங்கம்
வாசிப்பு 57
திருக்கார்த்தியல் - ராம் தங்கம்
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போற் போற்றாக் கடை. (குறள் 315)
எனக்கு விருதுகள் மீது உள்ள நம்பிக்கை சரிந்து அவற்றின் பெயர்கள், எண்ணிக்கை மறந்துப் போய் காலங்கள் பல கடந்து விட்டது. அதற்கான காரணங்கள் அரசியல் பணம் தவிர வேறு எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ஒரு உண்மையான தரமான எழுத்துக்கோ , படைப்புக்கோ அல்லது சேவைக்கோ அல்லாமல் மேல் கூறப்பட்ட காரணங்களாகவோ அல்லது வெளிப்படாமல் மறைந்து இருக்கும் வேறு காரணங்களாகவோ பெரும்பாலன விருதுகள் கொடுக்கப்பட்டு வருவதை சமீபத்திய விருது நிகழ்வுகள் உறுதிச் செய்கிறது
விதிவிலக்காக கடும் இருட்டில் திடீரென தென்படும் மின்மினி பூச்சியின் வெளிச்சம் போல சில சமயங்களில் விருதுகள் சரியான படைப்புக்கும் , படைப்பாளிக்கும் , சேவைக்கும் கொடுக்கப்பட்டு விடுகிறது அதனின் தற்போதைய எடுத்துக்காட்டு தான் நண்பர் திரு.ராம் தங்கம் அவர்களின் திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்புக்கு கிடைத்து இருக்கும் யுவ புரஸ்கார் விருது. விருது என்பது ஒரு படைப்பாளிக்கு பெருமையல்ல ஆனால் அந்த படைப்பு பலதரப்பட்ட மக்களிடம் போய் சேர அந்த விருது ஒரு வாகனம் போல அமைகிறது. அவ்வாறு இந்த விருதும் இந்த படைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல இருக்கிறது ஆம்.,இக்கதைகள் சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் என பல வெற்றி திரைப்படங்களின் இயக்குநரான சசி அவர்களால் திரைப்படமாக உருமாறி தனி அறையில் நம் கண்களில் உருவான நீர் துளிகளை பொதுவெளியில் மழையாகக் கொட்ட வைக்கப்போகிறது அதற்கு என் வாழ்த்துக்கள்
சரி அப்படி என்ன இந்த கதைகளில் உள்ளது என்று கேட்டால் எதுவுமே இல்லை என்பது தான் உண்மை ஆம் நாம் படிக்க ஆரம்பிக்கும் போது நம்மில் உருவாகும் கதையின் நெளிவு சுழிவுகளோ , எதிர்ப்பார்த்த கதையின் போக்கோ, திருப்புமுனைகளோ , முடிவுகளோ எதுவுமே இந்த கதைகளில் இருக்காது இதுநாள்வரை நாம் படித்த சிறுகதைகளில் முற்றிலும் மாறுபட்ட சிறுகதைகளாக இவைகள் இருக்கின்றன. கதைகளுக்கு தேவை மற்றும் கதைகளுக்கு சுவாரசியம் கூட்ட வேண்டும் போன்ற போர்வைகளை எதையும் போர்த்தாமல் வாழ்வியலோடு கலந்த இயல்பான நிகழ்வுகளை கொண்டு இந்த பதினோரு கதைகளையும் ஒரு நேரலை போல நம் முன் காட்சிப்படுத்துகிறார் எழுத்தாளர் திரு.ராம் தங்கம். இது இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதை நம்புவதற்கு மிகவும் கடினமாகருக்கிறது.
பதினொரு கதைகளில் இரண்டு கதைகளை (4.பெரியநாடார் வீடு , 7.விரிசல்) தவிர மீதி இருக்கும் ஒன்பது கதைகளில் எட்டு கதைகளின் முடிவுகள் சில வினாடிகள் நம் மனதை கனமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு அடுத்த கதைக்கு செல்ல முடியாதபடி நம்மை கட்டிப்போடுகிறது. முக்கியமாக ஐந்தாவது மற்றும் பதினோரவது கதையும் (5.ஊழிற் பெருவலி, 11.கடந்து போகும் ) என்னை இனம் புரியாத ஒரு குற்ற உணர்வுக்கு அளக்கியது அதிலும் "ஊழிற் பெருவலி" கதையில் வரும்
" சாறு பிழிந்து எடுத்துவிட்டு வீசும் கரும்புச் சக்கையென அவளது முலைகள் வறண்டு தொங்கிக் கொண்டிருந்தன..."
"நா வாழ்ந்து கெட்டவளா? நான் கெட்டுப் போய் தான் வாழவே தொடங்கினேன். ஒடம்பு வலிக்குது ஒரு முப்பது ருவா தா. ஒரு கட்டிங் போடணும் "
என்ற இரண்டு வார்த்தைகளை கடக்க முடியாமல் பூகம்பத்தில் ஆடும் கட்டிடம் போல என் கைகள் நடுங்கியது என் இதயமோ நடுங்கி உடைந்து போனது. மூன்றாவது கதையான " முற்பகல் செய்யின்" என்னும் கதை தன்னந்தனியாக வீட்டில் சுற்றிலும் ஒலி அமைப்பை பொருத்திக் கொண்டு ஒரு திகில் படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துக்கிறது
பொதுவாக பொத்தகம் படிப்பவர்களை பார்த்து கேக்கப்படும் கேள்வி ஒன்று உண்டு "ஒரு பொத்தகம் என்ன செய்து விடும்" பிற பொத்தகங்கள் என்ன செய்யும் என தற்போது சொல்வதற்கில்லை ஆனால் திரு.ராம் அவர்களின் திருக்கார்த்தியல் என்னும் இப்பொத்தகம் இந்த கிடுக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்த திருக்குறளுக்கு ஏற்ப பிறர் வலிகளை நமது வலியாக உணரச் செய்து நமது அறிவை பயனுள்ளதாக்குகிறது.
😪✍️ கோடி

Comments
Post a Comment