ராஜ வனம் - ராம் தங்கம்
வாசிப்பு 42 ராஜ வனம் - ராம் தங்கம் "முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்ப கருவி வானம் கதழ் உறை சிதறிகார் செய்தன்றே கவின் பெறு கானம்" (அகம். 4:1-7) பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் என்ற நம் பெரும்பாட்டானின் கூற்று நம்மால் செயல்படுத்தபடுகிறதோ இல்லையோ காடுகளால் நன்கு செயல்பட்டு வருகிறது .காடு பல்வேறு உயிரினங்களின் புகலிடம்; வாழ்விடம். காடுகளை மரங்களின் வகைமைகளைக் கொண்டே வகைப்படுத்தினும், காட்டுச் சூழல் மண்டிலம் என்பது விலங்குகள், பறவைகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். பல்லுயிரின வளர்ச்சிக்கு அடித்தளமாக இக்காடுகள் விளங்குகின்றன. அதனால் தான் காடுகளுக்கு பல பெயர்களை தமிழ் இலக்கியம் வரையறுகிறது மரங்கள் அடர்ந்த மலைக்காடுகள் கானகம் என்றும், முல்லை நிலக் காடுகள் புறவு என்றும், அரசனது காவலில் உள்ள காடு மிளை, அரண் என்றும், சிறு மரங்கள் நிறைந்த காடு இறும்பு என்றும், மரங்கள் கரிந்து போன காடு சுரம், பாலை என்றும், வெயிலால் வாடிய காடு முளி என்றும், காவ...