சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் : கே.வி.ஷைலஜா

 

வாசிப்பு 45

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

தமிழில் : கே.வி.ஷைலஜா




மலையாள கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் மலையாள சுயசரிதைக் கட்டுரை தொகுப்பான சிதம்பர ஸ்மரணவின் தமிழ் மொழி பெயர்ப்பே இந்த சிதம்பர நினைவுகள்.தட்டில் என்ன இருக்கிறது என்பதைத் தடவித் தடவித் தெரிந்துகொள்ள ஆசைப்படும் ஒரு குருட்டுப் பிச்சைக்காரனைப் போல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அடை காக்கப்பட்ட இப்பொத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ய தனக்கு பேச மட்டுமே தெரிந்த தனது தாய் மொழியான மலையாளத்தை படிக்க கற்றுக்கொண்டேன் என ஷைலஜா அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டது எனக்கு ஏதோ மிகைப்படுத்தி சொல்லுவது போலவே தோன்றியது. ஆனால் இப்பொத்தகத்தை படித்தப் போது தான் அது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று எனக்கு புரிந்தது. மொழிபெயர்ப்பு என நம்மால் உணரமுடியாத அளவுக்கு ஏதோ பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் ஆன்மாவை தனக்குள் வாங்கிக்கொண்டது போல ஒவ்வொரு எழுத்தையும் உணர்வுப் பூர்வமாக மொழிபெயர்ப்பு செய்து இருக்கிறார்


யார் இந்த பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ? சாதாரண மனிதர் தானா? உலக மனித அனுபவங்கள் அனைத்தையும் ஒன்றுகூட்டி வார்த்து எடுத்த உயிர் உள்ள மனித உருவம் கொண்ட சூதை பொம்மையா? இல்லை! இல்லவே இல்லை! நமது நினைவுகளை  தனது எழுத்துக் களால் சிதம்பர நினைவுகளாக மாற்றும் ரசவாதம்   தெரிந்த மதிமயக்கி  சித்தன் இவர்!


ஒவ்வொரு நினைவுகளையும் படிக்க படிக்க தமிழ்நாட்டில் செத்து காணாமல் போன நீர்நிலைகள் எல்லாம் என் கண்கள் வழியே மீண்டும் மறுபிறவி எடுத்து ஓ... என ஓலமிட்டு ஒடியது. பித்து பிடித்தவன் போல என் சொந்த நினைவுகளை இழந்து  சிதம்பர நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு எங்கே எங்கேயோ உலவிக் கொண்டு இருந்தோம் நானும் என் நினைவு அலைகளும் . அதில் இருந்து இயல்பு நிலைக்கு வரவே எனக்கு பெரும்பாடாக போய்விட்டது


அனுபவ நிகழ்வுகள் சிதம்பர கோவிலில் இருந்து தொடங்குகிறது. அலுமினியப் பாத்திரத்திலிருந்து சோறு அள்ளி நடுங்கும் கரங்கள் கொண்டு மனைவிக்கு ஊட்டிவிட்டுக் கொண்டு  இருந்த அந்த பெரியவரின் கதையை கேக்கும் போது இக்காலத்தில் யாருக்கு கிடைக்கும் இது போன்றதோறு வாழ்க்கை என வியந்தேன். இப்படி ஒரு வாழ்வை வாழ்ப்பவர்களுக்கு மரணமும் அப்படியே அமையுமா தெரியவில்லை. ஒருவேளை இது தான் சிதம்பர ரகசியமா?


தன் பள்ளிப் பருவ ஒரு தலை காதலியான அழகான சாஹினா விடம் மிரட்டி பயமுறுத்தி வாங்கிய முத்தத்தை தீயால் வெந்து தோல் சுருங்கிப் போன சாஹினாவுக்கு திருப்பிக் கொடுக்கும் அந்த தருணங்களை வாசிக்கும் யாருக்கும் தான் கடந்து வந்த அந்த பள்ளிப் பருவக் காதல் உறுதியாக நினைவில் ஊஞ்சல் ஆடாமல் இருக்க வாய்ப்பு இல்லை நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை


கையில் இருந்த தட்டில் வேளாங்கண்ணி மாதாவின் படமும் சில நாணயங்களும்.வாடிய ரோஜாப்பூவும் சுமந்து வந்து காணிக்கை கேக்கும் அந்த கிழவியின் துயரங்கள் இந்த பூமியில் இன்னும் இப்படியான மனிதர்கள் வாழ்கிறார்களா? .கருணை என்பது வெறும் கிழங்கின் பெயராக மட்டுமே மாறிபோனதா? என்னும் கேள்விகள் என்னுள் எழுந்தன. கடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தால் அழுகை வராமல் இருக்கும் வாழ்க்கை எத்தனை பேருக்குச் சாத்தியம்?


என்னை இந்த நினைவு பொத்தகத்தில் மிகவும் ஈர்த்தவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எனக்கு யாருமில்லை என்று உடைந்து அழும் போது "அப்படி நீ சொன்னது தப்பு தம்பி.உனக்கு ரெண்டு பேரு இருக்காங்க. ஒண்ணு இந்த அண்ணன்.இன்னொண்ணு" என மேலே கையை காட்டிய ஜோசஃப்

நான் பெரும்பாலும் ஜோசஃபாகவே இருக்க முயற்சிக்கிறேன் ஆனால் சூழ்நிலை என்னை பாலசந்திரனாகவே வைத்து உள்ளது இப்படி திறமையானவர்களை ஊக்கப்படுத்தும் என் முயற்சியை என் நெருங்கிய நண்பன் உள்நோக்கத்தில் தான் இதை நீ செய்கிறாய் என்றபோது நான் கொஞ்சம் சுக்கு நூறாக நொறுங்கி தான் போனேன். இருப்பினும் யார் என்ன சொன்னாலும் என் முயற்சிகள் தொடரும்...


சில பெண்கள் மீது தனக்கு இருந்த சபலத்தையும்  அதில் ஒரு பெண்ணின் கையால் அரை வாங்கியதையும், இரவு நேர தோழி ஒருவளை தனது வீட்டுக்கு இரவில் தன் மனைவி விஜயலட்சுமி இருக்கும் போதே அழைத்து வந்த நிகழ்வையும் எப்படி ஒரு பிரபலமான ஒருவரால் image போய் விடும் என்ற பயமே இல்லாமல் வெளிப்படையாக எழுத முடிகிறது என்று நான் யோசிக்கும் போது எழுத்தாளர் பிரபஞ்சனின் குரல் கேட்டது "அப்படிப்பட்ட கூந்தல் இமேஜே எனக்கு  வேணாம்..."


இந்த பொத்தகத்தில் மிகவும் சுவராசியமானதும்  நம்மை வியக்க வைக்கும் பகுதி "மகா நடிகன்". நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடனான சந்திப்பு. சிவாஜி கணேசனையும் அவரது வீட்டையும்.. வீடென்றா சொன்னேன் இல்லை அந்த அரண்மனையை பாலச்சந்திரன் வியந்து விவரிக்கும் போதும் ஏதோ virtual reality ல் இருப்பது போல் ஒரு 

பிரமை ஏற்படுகிறது . இவர் ஒரு மலையாள கவிஞர் என பாலச்சந்திரனை ராஜீவ்நாத் சிவாஜி அவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது. சட்டென சிவாஜியின் பாவம் மாறி கண்களில் சாந்தம் பரவ , தன்னை அப்படியே கொஞ்சம் சுருக்கி  இரு கைகளையும் கூப்பி  கவிஞரா? வணக்கம்  என்று சொல்லும். காட்சிகள்,  ஒரு கலைஞனை எப்படி நடத்த வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள். 


மலையாளத்தில் சரித்திர புராண நாடங்கள் இல்லையா? சிவாஜி கணேசன் கேட்டப் போது சொந்த மொழியை விரும்பாமல் அன்னிய ஆங்கில மொழிக்கும், சிந்தனைக்கும், தூபம் போடுவதில் சந்தோசம் கொள்ளும்  அல்பனான சராசரி மலையாளியை நினைத்து வெட்கி தலைக்குனிகிறார் . இது தமிழர்களுக்கும் பொருந்தும்



இந்த பொத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்து மூடி வைக்கும் போது கீழே விழுந்த கோழி முட்டையை போல உங்கள் மனது கலங்கிப் போவது நிச்சயம்!


✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு