பார்வை வழிப் பயணம் - லதா

வாசிப்பு 44


பார்வை வழிப் பயணம் - லதா 





நினைத்து பார்த்தால் கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது! ஏன் இந்த பொத்தக திறனாய்வு எழுதக்  கூட எனக்கு சிறிது நடுக்கமாக தான் இருக்கிறது! . இந்த பொத்தகத்தை ஒரு ஆண் எழுதி இருந்தால் என்ன ஆகிருக்கும்? அவனுக்கு ஆண் ஆதிக்கவாதி, அடிப்படைவாதி போன்ற சொற்களை கரும்புள்ளி, செம்புள்ளியாக குத்தி வசை மொழிகளை மாலையாகச்  சூடி  கழுதை மீது ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று இருப்பார்கள் ஏன் என்றால் பெண்ணியம் மட்டுமே பேச்சுப்  பொருளாக இருக்கும் காலத்தில் ஆண்ணியத்தையும் பேசுகிறது. ஆசிரியர் லதாவின் "பார்வை வழிப் பயணம்" என்னும் இப்பொத்தகம். 


ஆண்டு ஆண்டு காலமாக பெண் உயர்ந்தவள் ? அல்லது ஆண் உயர்ந்தவன்? என்ற விவாதம் நடந்து வருகிறது. பெண் தான் உயர்ந்தவள் என்றும் இல்லை. இருவரும் சமாமனவர்கள் என்றும் முற்போக்குவாதிகள் என சொல்லிக்கொள்ளும் சிலர் கூறி வருகிறார்கள் இதை முற்றிலும் மறுக்கிறது இந்த பொத்தகம். ஆண், பெண் இருவரும் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர்களோ , தாழ்ந்தவர்களோ அல்லது சமமானவர்களோ கிடையாது, ஏன் ஆணுக்கு ஆணோ , பெண்ணுக்கு பெண்ணோ கூட உயர்ந்தவர்களோ , 

தாழ்ந்தவர்களோ அல்லது சமமானவர்களோ கிடையாது, அவர் அவர்களுக்கு என்று தனி தனியான உயிர், உடல் , மூளை மற்றும் இதயங்களை பெற்ற தனித்துவமானவர்கள் என உறுதிப்பட சொல்கிறது ஆசிரியர் லதாவின் எழுத்து 


பெண்ணின் கற்புக்கரசி பட்டத்திற்கு ஈடானது உத்தியோகம் புருஷ லட்சணம் என்ற பட்டமும். சமையலறையிலேயே நான் காலம் கழிக்க வேண்டுமா என்ற ஒரு பெண்ணின் கேள்வி எவ்வளவு நியாயமானதோ, அவ்வளவு நியாயமானது காலம் பூராவும் எனக்குப் பிடிக்காத வேலையில் இருந்து கொண்டாவது சம்பாதித்து ஒரு பெண்ணை, குடும்பத்தைக் காப்பாற்றியே ஆக வேண்டுமா என்ற ஒரு ஆணின் கேள்வியும்! எப்படி ஒரு பெண் பிறந்தது முதல் ஆடையிலும் அலங்காரத்திலும் நாட்டம் கொள்ள வைக்கப்படுகிறாளோ, அதுபோல் ஒரு மகனும் குடும்பத்திற்கான பணம் ஈட்டவே தயார் செய்யப்படுகிறான் என்பதே உண்மை! 


ஆண்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் பெண்ணிற்கு சுதந்திரம் கிடைக்காத வரை காவலாளி என்ற சிறைக்குள் இருந்து உங்களுக்கு விடுதலை கிடையாது. பெண்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் அவனுக்கு சமைப்பது உங்கள் வேலை இல்லை என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்காக சம்பாதிப்பதும் அவன் வேலை இல்லை 


பாலியல் வறட்சியை விட அன்பின் வறட்சியே இங்கே பல திருமண உருவுங்கள் பிரிந்து போகக்  காரணமாக அமைகிறது. இதற்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகியும் தன் மனைவியின் மீது தீராத காதலோடு இருக்கும் ஆசிரியர் லதாவின் நண்பர் சொல்லும் தீர்வு மிகவும் பொருத்தமானது உண்மையானது "கல்யாணம்ங்கிறது ஒரு பிசினஸ் மாதிரி. இப்போ சரவணா ஸ்டோர்ஸ், இல்ல ரிலயன்ஸ் எதாவது உதாரணத்துக்கு எடுத்துப்போம். பிசினஸ் நல்லா வளர்ந்தாச்சு, பேரு வாங்கியாச்சு, இது தெரியாத மனுஷங்களே இல்ல. ஆனா ஏன் இன்னும் விளம்பரம் பண்ணிட்டேயிருக்காங்க? அவங்க உசந்துட்ட இந்த நிலையில் அவங்க நிலைச்சு நிக்கணும்னா, மக்கள் அவங்கள மறக்காம பாத்துக்கணும், இல்லனா கொஞ்ச நாள்ல மறந்துடுவாங்க, வியாபாரம் சரிஞ்சிடும்.அதே மாதிரிதான் கல்யாணமும். ஆரம்பத்துல ஒருத்தர ஒருத்தர் புரியற வரைக்கும் அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு பாத்துப் பாத்துச் செய்வோம். அவங்கள சந்தோஷத்தப்படுத்த மட்டுமே நாம் பிறவி எடுத்த மாதிரி பாத்துப்போம். ஆனா, ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சப்புறம், இனி அவங்கதானே நம்மளப் புரிஞ்சிப்பாங்கனு தோன ஆரம்பிச்சிடும். கொஞ்சம் கொஞ்சமா அவங்க மேல இருக்கிற கவனம் போய்டும். பல பொறுப்புகளுக்கு நடுவுல இது சில வருஷங்கள் கடந்துடும். ஆனா திடீர்திடீர்னு என்னைக்காவது தோனும் நமக்குள்ள அந்த அன்யோன்யம், சுவாரசியம் போயிடுச்சுனு. ஆனா அப்பவும் அதப் பத்தி பேசமாட்டோம். கொஞ்சம் கொஞ் சமா பிளவு அதிகமாகிட்டே போகும். அதுக்கப்புறம் ஒரு கடமையாதான் எல்லாம் நடக்குமே தவிர காதல் தொலைஞ்சு போயிருக்கும்" எவ்வளவு உண்மையான வார்த்தைகள். எப்போதும் காதலை புதிப்பித்துக் கொண்டே இருங்கள் நம்ம ஆள் தானேனு அசட்டையா விட்டிங்கன. அப்புறம் அது பொருள் இல்லாமல் போய்டும் பார்த்துக்குங்க 


இங்கே ஆண்கள் என்றால் இப்டி தான் இருக்க வேண்டும் பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற செயற்கையான இலக்கணம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கணத்தில் இருந்து வெளியே வந்து தனது உண்மையான தனித்துவதோடு  வாழ நினைப்பவர்களை ஏதோ இந்த உலகத்தில் வாழ தகுதி இல்லாதவர்களை போல நடத்துகிறோம், உருவத்தில் உள்ள வேறுபாடுகளை ஏற்கும் நாம் மனதில் உள்ள வேறுபாடுகளை.ஏற்க தயங்குகிறோம். ஒரு ஆண் வீட்டில் இருந்து சமைப்பது .துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்தால் அவனை பொட்டை என்றும் ஒரு பெண் தன் உரிமைகளை சற்று சத்தமாக பேசி விட்டதால் அவளை ஆம்பளை மாதிரி பேசுற பாரு என கேலி செய்யும் பழக்கம் எப்போது ஒழியுமோ அப்போது தான் இந்த சமுதாயம் சமநிலை அடையும் 


பொதுவில் பெண் சுதந்திரத்தை பேசி விட்டு வீட்டுக்குள் என்ன சோறு செஞ்சு இருக்கே என்று தட்டை வீசி எறியும் ஆண்ணை விட மோசமனவர்கள் பெண்ணியம் பேசி விட்டு தன் வசதிக்காக ஆண் பின்னால் ஒளிந்து கொண்டு பெண் என்பதால் கிடைக்கும் சலுகைக்காக சுயம் இழந்து வாழும் பெண்கள்.இப்படிப்பட்ட பெண்களையும். அனைத்துக்கும் ஆண்கள் மட்டுமே காரணம் என்று குற்றம் சொல்லும் பெண்களையும் மிக கடுமையாக சாடுகிறார் ஆசிரியர் லதா."நான் உடல் தெரிய ஆடை அணிவேன். ஆனால், யாரும் என்னைப் பார்க்கக் கூடாது என நினைப்பது எதில் சேர்த்தி? அணிவதே பார்ப்பதற்குத்தான் என்ற மன ஒப்புதல்கூட இல்லை எனில் என்ன பெண்ணியம் வேண்டி இருக்கிறது? ஒருவனுடன் உடன்பட்டு படுத்துவிட்டு நாளை அவன் திருமணம் புரியவில்லை எனில் அவன் என்னை ஏமாற்றி விட்டான் எனக் கூச்சல் போடுவது எதில் சேர்த்தி? படுத்தவனுடன்தான் வாழ்வேன் என்ற கற்புக்கரசியாக இருந்தால், திருமணத்திற்கு முன் படுக்க ஏன் இடம் கொடுக்க வேண்டும்? நமக்கும் தேவைப்பட்டுச் செய்த காரியத்திற்கு அவனை மட்டும் குற்றவாளி ஆக்குவது எதில் சேர்த்தி? கணவனுடன் படுத்துவிட்டு அதை இருவரின் சுகம் என எண்ணாமல், ஏதோ அவனுக்காகத் தியாகம் செய்துவிட்டுக் கொடுத்துப் போவது போலவும், அவனுக்கு ஏதோ உதவி செய்தது போலவும் நமக்கு அதில் எதுவுமே கிடைக்காதது போலவும் பேசுவது எதில் சேர்த்தி? இன்னும் ஆயிரம் அடுக்கலாம். இதில் ஏதாவது ஒன்றை நாம் செய்து கொண்டிருந்தால் கூட சமத்துவம் பேசும் உரிமை நமக்கில்லை. பெண்ணியம் பேசும் அருகதை நமக்கில்லை".


 இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களும் இயற்கை என்னும் பேர் அதிசயத்தின் ஒரு துகள் தான் ஆணோ பெண்ணோ தீய செயல்களை யார் செய்தாலும் அந்த பாதிப்பு அனைத்து உயிர்க்குள்ளும் விதைக்கப்பட்டு மிக பெரிய காடாக உருவெடுத்து விடும் அதனால் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்லாமல் .காரணிகளாக்காமல் நல்லதையே நினைத்து வாழ்வோம்  


✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு