இலக்கற்ற பயணி - எஸ்.ராமகிருஷ்ணன்


வாசிப்பு 43


 இலக்கற்ற பயணி - எஸ்.ராமகிருஷ்ணன்



மனது ஒரு நிலையில் இல்லாமல் தாவி தாவி குதிக்கும் போதும்,நிலைக்குத்தி நகர முடியாமல் சிக்கி தவிக்கும் போதும், அதிலிருந்து விடுபட நான் கையில் எடுக்கும் ஓரே பிணி தீர்க்கும் மருந்து எஸ்.ரா வின பொத்தகம் தான் .அது என்னை உருவம் தெரியாத மனிதர்களை நேசிக்க வைக்கும்.  ஊர் சுற்றி பறவையாக  என்னை மாற்ற முயற்சிக்கும். அதே போலவே  இலக்கற்ற பயணியும் என் அடையாளங்களை மறக்க வைத்து, எடையற்ற  இலையின் சருகாய்  காற்றில் மிதக்கச் செய்து எல்லையற்றப் பயண அனுபவங்களுக்கு  என்னை சொந்தக்காரன் ஆக்குகிறது.


பொதுவாக எஸ்ரா வின் பயண பொத்தகம்  இயற்கையின் அழகியலை  போற்றும் மாறாக இந்த பொத்தாம் இந்தியா மற்றும் உலக வரலாற்றை  பேசுகிறது. வரலாறு என்பது முடிந்துப் போன கடந்தக் காலமில்லை அது உயிர் உள்ள நிகழ்காலம் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வது மட்டுமே அல்லாமல் ஒவ்வொரு பக்கத்தின் முடிவிலும் வரலாற்றின் மீது நாம் காட்டும் அலட்சியத்தை வருத்தம் கலந்தக் கோபத்தோடு கண்டிக்கிறார்.


பயணம் செய்வது வேறு சுற்றுலா செல்வது வேறு, பயணம் என்பது உலகை அறிந்துகொள்ளும் ஒரு வழி . சுற்றுலா என்பது பொழுதை போக்குவதற்கான ஒரு வழி. ஒவ்வொரு பயணியும் ஒரு ரகசிய ஆய்வாளன். அவன் எதைக் கண்டுபிடிக்கிறான் என்று யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை


மதுரையில் உள்ள சமண குகைகளை நோக்கி எஸ்.ரா வின் பயணக் குறிப்பு இயற்கை மீது நம் தொடுக்கும் வன்முறைக்கு சான்று. விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்த அத்தனை கிராமங்களிலும் இன்று மலையை உடைத்து பாறைகளை வெட்டி எடுப்பதே தொழிலாகி விட்டது. கை கால்கள் துண்டிக்கப்பட்ட மனிதனை போல மலையின் பாதி வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு கிரானைட் கற்களாக விற்கப்பட்டு விட்டன.பறவைகளின் சத்தமே இல்லாத கல்லறை போன்ற சாலையாக  மாறிபோய் விட்டது


இலக்கியவாதிகளை அழைத்து வந்து மாணவர்களுக்குச் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றச் சொல்லி, சில மாத காலம் தங்கும்படி வசதி செய்து தந்து, போதுமான பொருளாதார உதவிகள் செய்து கொடுத்து அவர்களது கையெழுத்துப் பிரதிகளைப் பொக்கிஷம் போல பாதுகாக்கின்றன அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள். தமிழகத்தில் இவையெல்லாம் எட்டாக்கனவுகள் என தன் மனக்குமுறலை இந்த பொத்தகத்தில் எஸ்.ரா வெளிப்படுத்துகிறார்.


சிங்கப்பூரில் வங்கிகள், அரசு அலுவலகம், உயர்தொழில்நுட்ப வளாகம் என எங்குச் சென்றாலும் தமிழில் பேசமுடிகிறது. நான் அறிந்தவரை சென்னையில் மட்டும்தான் மூத்திரம் பெய்வதற்குக் கூட ஆங்கிலத்தில் கேட்க வேண்டிய சூழல் உள்ளது என்று தன் மொழிப் பற்றை வேதனையோடு விளக்குகிறார்


காலம் உறைந்து ஒரு மலையாகி இருக்கு கழுகு மலை எனப்படும் அரைமலையை பற்றிய தகவல்கள் நிறைந்த "துறவின் அழகியல்" என்னும் அத்தியாயத்தை வாசிக்கும் போதும். சென்ற ஆண்டு Gomathisankar Gosar  sir தலைமையில் அங்கு சென்று கண்ட காட்சிகள் மீண்டும் என் கண் முன் சிறகை விரித்தது


தார்பாலைவனத்தில் ஒட்டகமேறிப் போய் மணலின் பிரம்மாண்டத்தைக் காண வேண்டாமா? உடல் முழுவதும் சேறுப் படிய காண்டாமிருகம் வட்டபாதம் அதிர நடந்து செல்லும் காட்சியை அஸ்ஸாம் போய் ஒருமுறையாவது பார்க்க வேண்டாமா? ரங்கனத் திட்டிற்கு வரும் சைபீரிய நாரைகளின் குரலைக் கேட்க வேண்டாமா? உலகிலேயே அதிக அளவு மழை பெய்யும் சிரபுஞ்சியில் நனைவதற்காக மேகாலயா எப்போது போவது? இவை எல்லாவற்றையும் அடையாமல் பின் எதற்கு இந்த வாழ்க்கை? உண்டு உறங்கி, சுகித்து, உடல்வளர்ப்பது மட்டும் தான் வாழ்க்கையா என்ன? வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது. அதற்குப் பயணமே எளிய வழி


✍️கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு