ஆயுத தேசம் - கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு - இரா.மன்னர் மன்னன் - திறனாய்வு பகுதி 1

 

வாசிப்பு 47(1.O)

ஆயுத தேசம் - கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு -
இரா.மன்னர் மன்னன்

திறனாய்வு பகுதி 1




ஆரியர்களாலும், தனது அரசியலுக்காக பொய்யான வரலாறை பேசி திணிப்பவர்களாலும்,  மதவாதிகளாலும் தமிழகத்தின் அறிவியலும் வரலாறும் தொடர்ந்து மறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று மறைக்கப்பட்டு உள்ளது. அது என்ன? அது தான் தொழில்நுட்பம்  அப்படி என்ன தொழில்நுப்டம் மறைக்கப்பட்டது?இன்று உலக பணக்காரன் யார் என ஒரு பட்டியலை போடுகிறோமே, அந்த பட்டியலில்  முதல் பணக்காரரை முடிவு செய்வதே இந்த தொழில்நுட்பம் தான் . அந்த பட்டியலில் முதல் முதலாக இடம் பிடித்தவர் ஆப்ரஹாம் டெர்பி (கிபி.1678 - 1717) அந்த தொழில்நுட்பம் இரும்பு . ஆம்  கிமு.3 ஆம் நூற்றாண்டிலேயே இந்த உலகத்திற்கு இரும்பு தொழில்நுட்பத்தை  அறிமுகம் செய்தது தமிழர்கள் தான் ஆனால் சேர, சோழ , பாண்டிய நாடுகள்  அறிமுகம் செய்யவில்லை.இந்த  வியக்கத்தக்க தொழில்நுப்பத்தை உருவாக்கியது கொங்கு நாடு தான் என்ற  தனது ஆய்வுகளை தக்க சான்றுகளோடு நம் முன் இந்த பொத்தகத்தின் மூலம்  நிறுவுகிறார் ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன்

உலகில் 2000  ஆண்டுகளுக்கும் முந்தைய இரும்புப் பொருட்கள் தனியாக கிடைத்த இடங்கள் பல உள்ளன ஆனால் , 2000 ஆண்டுகளுக்கும் முன்பே இரும்புப் பொருட்கள் தயாரிக்கப்பட்ட இடம் ஒன்றே ஒன்று தான் உள்ளது அது தமிழகம். உலக வரலாற்றில் தமிழகம் அளவுக்கு வேற எந்த பகுதியும் இரும்போடு அதிகமாகத் தொடர்புபடுத்தப்பட்டது இல்லை

கிபி.3 அம் நூற்றாண்டு முதல் கிபி.7 ஆம் நூற்றாண்டு வரை உலக யுத்தக் களங்களில் வீரர்களால் மிகவும் விரும்பப்பட்ட வாட்கள் சிரியாவின் தலைநகரமான டொமாஸ்கஸ் வாட்கள் தான் இந்த வாட்களின் தொழில்நுப்பத்தை இன்று வரை ஐரோப்பிய ஆய்வாளர்களால் துல்லியமாக கண்டறிய முடியவில்லை. அந்த இரும்பை சிரியர்கள் அன்றைய தமிழகத்தின் கொங்குப் பகுதியில் இருந்தும் இலங்கையில் இருந்தும் தான் இறக்குமதி செய்தார்கள் என அணித்தரமாக பதிவு  செய்து உள்ளார் ஆய்வாளர் கே.என்.பி.ராவ். இந்த கருத்தை உலக அளவில் மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது

தமிழகத்தில் மூன்று விதமான இரும்புக் கலவைகள் பயன்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது அவை மெல்லிரும்பு (Wrought Iron), வார்ப்பிரும்பு (Cast Iron), எஃகு அல்லது உருக்கு இரும்பு (Steel/Wootz), இதில் மெல்லிரும்பு என்பது கார்பன் குறைவாக உள்ள இரும்பு ஆகும். இது வலிமை குறைவானது, ஆயுதங்கள் செய்யப் பயன்படாதது.அடுத்ததாக, வார்ப்பிரும்பு என்பது அதிக அளவிலான கார்பன் உள்ள இரும்பு. இது மெல்லிரும்பை விடவும் அதிக உறுதிகொண்டிருக்கும், ஆனால் ஒரு கல்லைப்போல உடையும் தன்மையையும் பெற்றிருக்கும். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் பயன்படுத்தப்பட்ட தோசைக் கற்கள் இதற்கான நல்ல உதாரணம். இதுவும் ஆயுதங்கள் செய்ய ஏற்றது கிடையாது.
இவற்றுக்கு இடையே 1.2% முதல் 2% வரையில் கார்பன் சேர்க்கப்பட்ட தரமான இரும்பே எஃகு அல்லது உருக்கு இரும்பு ஆகும். 1.7% கார்பன் உள்ள எஃகு தலைசிறந்தது. இரும்பின் வகைகளில் எஃகே சிறப்பானது

உருக்கு இரும்புக்கு ஊட்ஸ் எனப் பெயர் வைத்த ஆங்கிலேயர்களுக்கு அதன் உண்மையான தொழில்நுட்பம் தெரியவில்லை, கி.பி.19ஆம் நூற்றாண்டில், சைக்கிள் டைனமோவைக் கண்டுபிடித்தவரான இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளர் மைக்கேல் பாரடே, ஊட்ஸ் இரும்பின் செய்முறையைக் கண்டுபிடிக்க முயன்றார் என்பதே இதற்கான ஆதாரம்.

தரமான எஃகு என்பது பெரும்பாலும் இயற்கையில் கிடைப்பதில்லை. மெல்லிரும்பில் கார்பனைச் சேர்த்தோ, வார்ப்பிரும்பில் கார்பனை நீக்கியோ அது எஃகாக மாற்றப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு கிடைக்கும் இரும்பு பொதுவாக அதிக கார்பன் கொண்டது. அதில் இருந்து கார்பனை நீக்கி எஃகாக்கும் தொழில்நுட்பம் 'கரியநீக்கம் (Decorbonisation)' என்று தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. இதை எப்படி பண்டைய தமிழகத்தில் சாதித்தார்கள்?

பண்டைய தமிழகத்தில் இரும்பை உருக்க ஒருவிதமான உலைக்கலனும், எஃகை உருக்க இன்னொரு வகையான உலைக்கலனும் பயன்படுத்தப்பட்டதை அகழாய்வுகள் காட்டுகின்றன. இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணலில் இன்றும் இந்த 2 வகையான உலைக் கலன்கள் காணப்படுகின்றன.

இரும்புக்கான உலைக் கலன்கள் நிலத்துக்கு மேலும்,எஃகுக்கான உலைக் கலன்கள் நிலத்துக்குக் கீழும் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன. தாதுவில் இருந்து இரும்பை வடித்தெடுக்க 1100 டிகிரி வெப்பமும், அதை எஃகாக மாற்றி வடித்தெடுக்க 1300 டிகிரி வெப்பமும் தேவை என்பதை அன்றைய தமிழர்கள் எப்படிக் கணக்கிட்டனர் என்று எண்ணும்போதே வியப்பு அதிகரிக்கிறது. ஆக, தமிழர்கள் எஃகால் செய்யப்பட்ட ஆயுதங்களை தான் வணிகம் செய்தார்களே  தவிர  சில கருப்பு கண்ணாடி போட்டவர்கள்  சொல்லுவது போல தொழில்நுட்பத்தை எல்லாம் விற்று திங்கவில்லை!

சங்க இலக்கியங்களில் இரும்பை பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்று உள்ளது . எடுத்துக்காட்டாக நற்றிணையின் 133வது பாடலில் காணப்படும்,'இரும்பு செய் கொல்லன் வெல் உலைத் தெளித்த தொய்மடல் சில் நீர் போல்' என்ற உவமை மிக அழகானது. 'இரும்புக் கொல்லனின் வெப்பமான உலையின் மீது பனை ஓலையில் சேர்ந்த குளிர்ந்த நீர் தெளித்ததுபோல' என்பது இதன் பொருள் ஆகும்.அதே நற்றிணையின் 249வது பாடலில்,
'இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை' என்ற உவமை காணப்படுகிறது. 'இரும்பைப் போலக் கருத்த கிளைகளை உடைய புன்னை மரம்' என்பது இதன் பொருள் ஆகும். இதுபோலவே அகநானூற்றின் 56ஆம் பாடல் 'எருமையின் கொம்புகள் இரும்பைப் போலக் கருமையாக இருந்ததாக' உவமை கூறுகின்றது.

ஆதிச்சநல்லூரின் அகழாய்வில், பெரிய முனையுள்ள வாய் உள்ள ஈட்டி, சிறிய முனையுள்ள ஈட்டி, செங்கோண ஈட்டி, கூர்மையான வாயுள்ள ஈட்டி, கூம்பான வாயுள்ள ஈட்டி, திரிசூலம், குத்துவாள், குழிவான விளிம்புகள் கொண்ட குத்துவாள், இரு பக்கமும் கூர்மையான வாள், ஒரு பக்கம் கூர்மையான வாள், உடைவாள், பலவகையான வளைவுகள் கொண்ட வாட்கள், எறியும் வேல், அம்புத் தலை கொண்ட வேல், கூரிய அம்புத்தலைகள், கைக்கோடரி, நேரான கத்தி, வளைவான பலவகைக் கத்திகள், பட்டாக் கத்தி, கேடயம், பரசுக் கத்தி ஆகியவையும், சரியாக அடையாளம் காணப்படாத இன்னும் பலவகை இரும்பு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வளவு வகையான இரும்பு ஆயுதங்கள் அப்போது உலகின் எந்தப் பகுதியிலும் புழங்கி இருக்கவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டியது.
இத்தனைக்கும் தமிழகப் பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த ஆயுதங்கள் குறித்து சிறப்பான ஆவணங்கள் எதுவும் இங்கு உருவாக்கப்படவில்லை. அப்படி இருந்தும் இவ்வளவு தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இன்னும் ஒரு வியக்கத்தக்க தமிழர்களின் தொழில்நுப்பத்தை ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் மறுக்கமுடியாத சான்றுகளோடு இந்த பொத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார் அதை பகுதி 2 ல் திறனாய்வு  செய்வோம்

✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு