உணவு சரித்திரம்(பாகம் - 3) - முகில்
வாசிப்பு 41
உணவு சரித்திரம்(பாகம் - 3) - முகில்
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தேரே ‘உண்டி முதற்றே உணவின் பிண்டம், உணவெனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே”— (புறநானூறு)
சரித்திரம் எங்கு இருந்து தொடங்கியது என சரித்திர பக்கங்களை திருப்பி பார்த்தால் அது மனிதன் எப்போதிலுருந்து சப்புக்கொட்டி உண்ண ஆரம்பித்தானோ அந்த காலத்துக்கு சென்று நிற்கிறது , நீர் இன்றி அமையாது உழவு , உழவு இன்றி அமையாது உணவு, உணவு இன்றி அமையாது உலகு. ஆகா உலக சரித்திரம் என்பது உணவு சரித்திரத்தைக் கொண்டே படைக்கப்படுகிறது. மிளகு என்ற உணவுக்காக தான் இந்தியா முதல் முறையாக அடிமையாக்கப்பட்டது, உணவு தான் ஒரு ஊரின் முக்கியமான அடையாளமாக திகழ்கிறது (திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா), உணவை வைத்து தமிழ் மருத்துவமும் அதை சார்ந்தத் தமிழ் பழமொழிகளும் உருவாக்கப்பட்டன. உணவை வைத்து தான் புராணங்கள் புனையப்படுகிறது. உணவை வைத்து தான் கடவுள் வழிபாடும் மற்றும் பண்பாடும் பிரித்தறியப்படுகிறது.இவ்வளவு ஏன் தற்கால அரசியலே உணவை கொண்டு தான் நடத்தப்படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த உணவு சரித்திரத்தின் மூன்றாவது பந்தியில் நம்மை அமரவைத்து சுட சுட காபியில் ஆரம்பித்து குளு குளு ஐஸ்க்ரீம் வரை மொத்தம் 14 உண்வு வகைகளை கொண்டு விருந்து படைத்துள்ளார் எழுத்தாளர் முகில்.இந்த விருந்தில் நம் வயிறு நிறைகிறதோ இல்லையோ நிச்சயமாக நம் அறிவு நிறையும். இதுவரை நாம் அறியாத நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளால் ஏற்பட்ட கலாச்சாரம், அரசியல் , வணிகம் , அறிவியல் கண்டுப்பிடிப்புகள், நாகரிக மாற்றங்கள் போன்ற நம்மை வியக்க வைக்கும் பல தகவல்களை கொண்டு நம் அறிவு பசியை தீர்த்து மூளையை ஏப்பம் விட வைக்கிறது இந்த பொத்தகம். சரி வாருங்கள் கொஞ்சம் ருசி பார்ப்போம்
காபி
அன்றைக்கு வழக்கத்தைவிட ஆடுகள் உற்சாகமாக இருந்தன. வீட்டுக்குத் திரும்பும் வேளையிலும் துள்ளிக்குதித்தபடியே வந்தன. அந்தத் துள்ளல் ஆடுகளின் நடனம் போலவே இருந்தது. இரவில் பலஆடுகள்தூங்கவே இல்லை. 'ம்ம்ம்மே!' என்று உற்சாகமாகக் கத்தியபடியே இருந்தன. ஆடுகளின் சொந்தக்காரரான கல்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்த நாள் ஆடுகளை மேயவிடும்போது அவை குறிப்பிட்ட ஒரு தாவரத்தில் காணப்பட்ட சிவப்பு நிற பெர்ரி பழங்களை விரும்பி உண்பதைக் கண்டார். அந்தப் பழங்களே ஆடுகளின் அதீத உற்சாகத்துக்குக் காரணம் என்று புரிந்துகொண்டார்.கல்டி, அந்த பெர்ரி பழங்களைத் தனக்குத் தெரிந்த துறவி ஒருவரிடம் கொடுத்தார்.கல்டி கொடுத்த பெர்ரி பழங்களை உண்டு பார்த்த துறவி, அவற்றின் உற்சாகமூட்டும் தன்மை கண்டு பயந்தார். 'சீச்சீ... இந்த பழங்களை உண்பது பாவம்' என்று அவற்றை நெருப்பில் எரிந்தார். சிறிது நேரத்தில் காப்பியின் நறுமணம் அந்தக் காற்றில் பரவியது. பழங்கள் நெருப்பின் சூட்டில் காப்பிக்கொட்டைகளாக மாறியிருந்தன. உலகின் முதல் காப்பிக்கொட்டை உருவான கதை இதுதான் என்றும் சொல்லப்படுவதுண்டு. காப்பிப்பழத்தையோ, செடியையோ உண்ணும் பழக்கம் முன்பே ஆரம்பித்திருந்தாலும், காப்பியைப் பானமாக மாற்றிப் பருகும் பழக்கமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவானது.
காப்பியை ஒரு பயிராக இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர்
குஃபி ஞானியான பாபா புடன். பதினாறாம் நூற்றாண்டின்மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்க்கொண்ட பாபா.அங்கே காப்பியின் சுவையில் கிறங்கினார். திரும்பும்போது,காப்பிக்கொட்டைகளை அள்ளிக் கொண்டு வர ஆசை. ஆனால்,அரேபியர்கள் தங்கள் வணிகத்தில் கறாரானவர்கள். வறுத்த
காப்பி கொட்டைகளை மட்டுமே வணிகத்துக்காக வெளியே
அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வேறெங்கும் காப்பி விளைய
ஆரம்பித்துவிட்டால் ஏமனின் வணிகம் படுத்துவிடுமல்லவா.பாபா, ஏழு காப்பி பழங்களை தனது நீண்ட, அடர்ந்த தாடிக்குள் மறைத்து வைத்துக் கொண்டார். (இஸ்லாமியர்கள் விரும்பும் எண் 7 என்பதால் அந்த எண்ணிக்கை.) பத்திரமாக இந்தியா
வந்தடைந்தார். அதுவும் 6000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம். தன் சொந்தப் பிரதேசமான சிக்மகளூரின் சந்திரகிரி மலைப்பகுதியில் அந்த காப்பிப் பழங்களை விதைத்தார்.
அவை முளைத்தன. காய்த்தன. பரவின. இந்தியாவின் முதல்
காப்பித் தோட்டம் கர்நாடகாவில் உருவானது. இன்றைக்கும் அந்த மலைப்பகுதி பாபா புடன்கிரி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இப்படியாக இந்தியாவுக்குள் காப்பி பயிர் வேரெடுத்து வைத்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம்
வரை பாபா புடன்கிரி மலையே இந்தியாவில் அதிகம் காப்பி.
விளையும் பகுதியாக இருந்தது.
Coffee என்ற சொல்லுக்கான வேர்ச்சொல்லின் வரலாற்றைப் பார்ப்போம். எத்தியோப்பியர்கள் அவர்கள் பேசும் அம்ஹாரா மொழியில் Buna என்றே காப்பிச் செடியை அழைத்தனர். அது அரேபிய மொழியில் Gahhwat al-bun என்றழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் சுருக்கமாக Gahwa, Kahway, Qahwa ஆகிய பல்வேறு வார்த்தைகளால்,அழைக்கப்படலானது. துருக்கியர்களின் வாயில் நுழைந்து Kahveh ஆனது. ஐரோப்பிய பானமாக மாறிய போது டச்சுக்காரர்களின் நாவில் Koffie ஆகவும், இத்தாலியர்களின் வாயில் Caffe ஆகவும், பிரெஞ்சுக்காரர்களின் உச்சரிப்பில் Café என்றும், பின்பு ஆங்கிலேயர்களின் எழுத்தில் Coffee என்றும் நிலைபெற்றது. தமிழர்களின் வாய்க்குள் சற்றே அழுத்தமாகப் புகுந்து புறப்பட்டு 'காப்பி' அவதாரம் எடுத்தது. இலங்கைத் தமிழர்கள் கோப்பி என்றார்கள். குளம்பி என்ற தமிழ்ச்சொல்லைக் கேட்பது அரிது. 'கொட்டை வடிநீர்' நகைப்புக்குரியதாக மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
பிரியாணி
பல நாடுங்கள் ,மதங்கள் பிரியாணிக்கு உரிமை.கூறினாலும் அகற்கு பல வரலாற்று சான்றுகள் கொடுக்கப்பட்டாலும் அவற்றுக்கெல்லாம் முன்பே நம் சங்கத் தமிழர்கள் பிரியாணி உண்ண ஆரம்பித்துவிட்டார்கள் என்று சங்கப் பாடல்கள் எல்லாம் சத்தியம் செய்கின்றன. சங்க காலத்தில் பிரியாணிக்கெல்லாம் முப்பாட்டனாக இருந்த அந்த உணவின் பெயர் ஊன் சோறு அல்லது ஊன்துவையடிசில்,
சங்ககாலத்தில் என்னென்ன சோறு வகைகள் இருந்தன என்பதை முதலில் பார்த்துவிடலாம். ஆக்கிய சோற்றுடன் பிற உணவுப் பொருட்களைக் கலந்து, அதற்கேற்ப அந்தச் சோற்றுக்குப் பெயரிட்டிருக்கின்றனர். அதன்படி நெய்ச்சோறு, புளிச்சோறு, பாற்சோறு, ஊன் சோறு (அதாவது இறைச்சி சேர்க்கப்பட்ட சோறு), கொழுஞ்சோறு (இறைச்சியின் கொழுப்பு சேர்த்து சமைக்கப்பட்ட சோறு), செஞ்சோறு, வெண்சோறு போன்றவை புழக்கத்தில் இருந்திருக்கின்றன. ஊன் துவையடிசில் என்பதில் ஊன் என்றால் இறைச்சி, துவை என்றால் அது உணவில் கவந்த தன்மை. அடிசில் என்றால் சமைக்கப்பட்ட உணவைக் குறிப்பது இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட உணவு என்று பொதுவாகச் சொல்லலாம். குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களைச் சார்ந்த மக்களும் இந்த ஊன் சோற்றை விரும்பி உண்டிருக்கிறார்கள். மன்னர்கள், தம்மைத் தேடி வந்து, பாடல் பாடி, பரிசில் பெற வந்த புலவர்களின் வயிறும் மனமும் நிறையும்படி ஊன் சோறு பரிமாறியிருக்கிறார்கள். அந்தப் புலவர்களும் தம் பாடல்களில் ஊன் சோறு உண்டதை மணக்க மணக்கப் பதிவு செய்திருக்கிறார்கள்.
"நெய் குய்ய ஊன் நவின்ற பல்சோற்றான், இன் சுவைய நல் குரவின் பசித் துன்பின்..."
புறநானூற்றில் கோவூர் கிழார் என்ற புலவர் சோழன் நலங்கிள்ளியைக் குறித்துப் பாடியிருப்பது. வறுமையில் வாடிக் கொண்டிருந்த எங்களுக்கு நெய், இறைச்சி, சோறு கலந்து சமைத்த இன்சுவை உணவை அளித்தான் என்கிறார். பசியால் உழல்பவனுக்குக் கிடைக்கும் பிரியாணி என்பது எவ்வளவு அற்புதமானது!
சங்க காலத்தில் சாதாரண மக்கள் முதல் பெரும் மன்னர்கள் வரை இந்த ஊன் சோற்றினை விரும்பி - உண்டிருக்கிறார்கள். மிளகு நம் மண்ணுக்கு உரியது. இன்னப்பிற வாசனைப் பொருள்களையும் அன்றே தமிழன் திரைக் கடலோடிக் கொண்டு வந்து சேர்த்தான். ஆக, மசாலா பொருள்களுக்குக் குறைவே இல்லாமல் தமிழர்கள் சமைத்த ஊன் சோறு என்ற சங்ககால பிரியாணியும் ருசி மிகுந்ததாகத்தான் இருந்திருக்கும் - என்று தாராளமாகச் சொல்லாம்.
இவைகள் மட்டும் இல்லாமல்
முருங்கை
மாதுளை
நிலக்கடலை
வரகு
கிராம்பு - சாதிக்காய்
சௌசௌ
பணியாரம்
தர்பூசணி - கிர்ணி
மூங்கில்
ஐஸ்கிரீம்
போன்றவற்றின் சரித்திரத்தையும் இந்த பொத்தகம் பேசுகிறது. அதுவும் முக்கியமாக நிலக்கடலையின் சரித்திரம் நாம் இதுவரை அறியாத இரு சரித்திர நாயகர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது
௧) வளவனுர் கோவிந்தய்யர்
தான் கற்றுக்கொண்டு செல்வம் சேர்த்தத் தொழிலை பக்கத்து வீடு, எதிர் வீடு, அடுத்த தெரு என அனைவருக்கும் சொல்லி கொடுத்து(36 வயதிலே படத்தில் வரும் ஜோதிகா மாதிரி) மிக பெரிய தொழிற் புரட்சியை செய்து. நிலக்கடலைக்கு "சீட்டு கிழிச்சான் கொட்டை" என்ற புதிய பெயர் வர காரணமாக அமைந்தவர். 1876-1878 ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்தை தாது பஞ்சம் புரட்டிப் போட்டது அப்போது இவர் செய்த நிவராணச் சேவை மிக பெரியது. அப்பொழுது தான் கடலை உருண்டையும் இவரால் முதல் முறையாக அறிமுகமானது.
தென்னிந்தியாவின் நிலக்கடலையின் தந்தையான இவரை தமிழர்கள் மறந்து போனது மிக பெரிய சரித்திர அவமானம்
௨) ஜார்ஜ் வாஷிங்டன் கார்வ்ர்
அமெரிக்காவின் நம்மாழ்வார் என்று கூட இவரை சொல்லலாம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் டைமண்ட்குரோவ் என்ற சிறிய ஊரில் பிறந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர். கருப்பினத்தவர். சிறு வயதிலேயே தன் தாயுடன் ஒரு வெள்ளைக்கார முதலாளியின் பண்ணையில் அடிமையாக வேலை பார்த்தவர். அந்த முதலாளி, கார்வரைப் படிக்க வைத்தார்.
கி.பி.1896-ம் ஆண்டில் கார்வர், வேளாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின் Tuskegee என்ற ஊரில் அமைந்த Normal and Industrial Unit என்ற நிறுவனத்தில் விவசாயத் துறைக்குப் பொறுப்பேற்றார். அப்போது அமெரிக்காவின் தென்பகுதியில் இருந்த விளைநிலங்களில் பருத்தி சாகுபடி மட்டுமே தொடர்ந்து நடைபெற்றதால் அவை விஷமாக்கப்பட்டிருந்தன. 'காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் சேர்க்கும் ஆற்றல் பருத்திக்கு இல்லை. அது நிலக்கடலைக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்குக்கும் உண்டு. அவற்றை விளைவித்தால் மண் மீண்டும் வளம் பெறும்' என்று வேளாண் அறிஞரான கார்வர் விவசாயிகளிடம் அக்கறையுடன் ஆலோசனை சொன்னார்.
அன்றைக்குச் சர்க்கரைவள்ளிக்கிழங்கும் நிலக்கடலையும் கால்நடைகளுக்கான உணவுகள் என்பதால் அவரது யோசனையை விவசாயிகள் நிராகரித்தனர். கார்வர். விவசாயிகளிடம் மீண்டும் மீண்டும் நிலக்கடலையின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார். சிலர் மட்டும் காது கொடுத்தார்கள். கார்வரின் வழிகாட்டுதலின்படி நிலக்கடலை பயிரிட்டார்கள். குறைந்த காலத்திலேயே நல்ல விளைச்சல். மண்ணும் வளம் பெறத் தொடங்கியது. பலரும் நிலக்கடலை சாகுபடிக்கு மாறினார்கள். அடுத்த மாற்றமாக அமெரிக்க மக்களும் நிலக்கடலையை விரும்பி உண்ண ஆரம்பித்தார்கள்.
இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும். விளைநிலங்களெங்கும் நிலக்கடலை. கிடங்குகளெங்கும் நிலக்கடலை. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று யாருக்கும் புரியவில்லை. கார்வர், தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் நிலக்கடலையை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். அதை நொறுக்கினார். வெப்பப்படுத்தினார். குளிரூட்டினார். அதனுள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று பிரித்து மேய்ந்தார். 33 சதவிகிதம் எண்ணெய்ச் சத்து இருப்பதைக் கண்டார். ஏழு வேதியியல் கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஏழு இரவுகள், ஏழு பகல்கள் - தவத்தை முடித்த கார்வர், நிலக்கடலையினுள் 24 விதமான பொருள்கள் இருப்பதாக அறிவித்தார். நிலக்கடலை ‘வெண்ணெய்’தயாரிக்கும் முறையை (Peanut Butter) செயல்படுத்திப் பார்த்தார். அப்படியே அதிலிருந்து எண்ணெய், பால், உணவுப் பொருள்கள், வார்னிஷ் என்று பல பொருள்கள் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். நிலக்கடலை ஒட்டிலிருந்தும் கார்ட்போர்டு, செயற்கை பளிங்குக் கல் உள்பட விதவிதமான பொருள்கள் செய்ய முடியும் என்று அறிவித்தார்.
நிலக்கடலையில் இருந்து இத்தனைவிதமான பொருள்கள் தயாரிக்கலாம் என்று கார்வர் நிரூபித்த பிறகு, அதன்மீது விவசாயிகளுக்குத் தனி ஈர்ப்பு உருவானது. அமெரிக்க அரசும் நிலக்கடலை மீது தனிக் கவனம் செலுத்த ஆரம்பித்தது. 1930-ம் ஆண்டில் அமெரிக்காவின் தென் மாநிலங்களின் முக்கியப் பயிராக நிலக்கடலை மாறியது. நிலக்கடலை மூலமாகவும், அதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மூலமாகவும் அமெரிக்காவுக்குப் பல மில்லியன் டாலர் வருமானம் கொட்ட ஆரம்பித்தது.
அது அமெரிக்க என்பதால் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரை புரிந்துக் கொண்டு வாய்ப்பு கொடுத்து அதன் மூலம் பயன்பட்டு மில்லியன் டாலர் வருமானம் பெற்று உயர்ந்தது. ஆனால் பல இயற்கை வளங்கள் உள்ள தமிழநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமை வேலை வாய்ப்புக்காக நம்மாழ்வாரை கேலி பொருளாக்கி கடைசிவரை கத்த வைத்து சாகடித்தார்கள் 😪
உணவே மருந்து என்பது தமிழர் அறம் ஆனால் தற்போது மருந்தே உணவாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த அவலத்தை மாற்றி நாளையே தலைமுறைக்கு நஞ்சு இல்லாத உணவை பெற செய்து புதியதோர் உணவு சரித்திரத்தை படைப்போம்
இழந்ததை மீட்போம்!
இருப்பதைக் காப்போம்
👩🌾🍛☕
கோடி

Comments
Post a Comment