சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
வாசிப்பு 38
சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
சோளகர் தொட்டி என்னும் இந்த நாவலை படித்து முடித்த பின் எனக்கு கொரோனா நோயை விட பெரும்தொற்று ஏற்பட்டு விட்டதாகவே உணர்ந்தேன் .இரண்டு மூன்று நாட்களாக உறக்கம் இல்லை. அப்படியே உறங்கினாலும் நடு இரவில் திடுக்கிட்டு எழுந்தேன், நாவறண்டு தொண்டை விக்கி தண்ணீர் குடித்தேன். இந்த நாவலைப் பற்றி எழுத நினைக்கையில் விழிகள் பிதிங்கியது, என் கைகள் நடனம் பழகியது . இதனை எழுதவே வேண்டாம் என்ற முடிவுக்கு நான் வந்த போது "நான் சுமந்த அம்மாக்களின் கதைகள் பாறையைவிட கனமானவை. இருளைவிட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும்" என பொத்தகத்தின் என்னுரையில் ஆசிரியர் ச.பாலமுருகன் அவர்கள் குறிப்பிட்டு இருந்தது என் நினைவுக்கு வந்தது. இருப்பினும் இந்த நாவலுக்கு மதிப்புரை எழுதும் அளவுக்கு இன்னும் என் மனம் சமநிலையை அடையவில்லை அதனால் இங்கே எனது புலம்பல்களை பதிவு செய்கிறேன்.
எளியோரை வலியோர் தன் அதிகார வலிமையால் அடக்குமுறை செய்வது காலங்காலமாக இந்த மண்ணில் நிகழ்ந்து வரும் ஒரு கொடூரமான அநீதி. அவை பெரும்பாலும் வசதியான பணக்காரனுக்கும் ஏழ்மையான குடியானவனுக்கும் இடையில் நடந்தேறும் .இதை பார்க்க வெறியாக தான் இருக்கும் ஆனால், இது இவற்றின் சுவடுகள் ஏதுவும் அறியாத இயற்கை ஒன்று தான் உண்டு என்று வாழும் சோளகர் என்ற பழங்குடி மக்களுக்கும் ஒரு தனி காட்டு மனிதனை பிடிக்க அதிகாரப் போதை ஏறி வெறிப்பிடித்து போன சில நாய்களுக்கும் இடையில் நடந்தேறிய இரத்தம் தெறிக்கும் சதைகள் பிய்ந்து தொங்கும் கொடூரமான நிகழ்வுகளின் எழுத்து ஆவண சுயசரிதை தான் இந்த சோளகர் தொட்டி
எந்தவகையில் நாம் உயர்ந்து விட்டோம் அவர்களை நாம் அதிகாரம் செய்ய?. நாகரிகம் அடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இன்னும் விதவைகளை ஒதிக்கி வைத்துதான் வாழ்ந்துவருகிறோம்.ஆனால் தொட்டியில் யார் வேட்டையாடி எதைக்கொண்டுவந்தாலும் முதல் பங்கு விதவைகளுக்கு தான்.பிறகு தான் எல்லோரும் பிரித்துக்கொள்கிறார்கள்.ஒரு பெண் ஒரு ஆண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்,அவனை விட்டு விலகவும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது தொட்டியில். அந்த அளவிற்கு ஆணும்,பெண்ணும் ஜனநாயகத்துடன் வாழ்கிறார்கள்.
ஒரு பொத்தகம் எனக்கு சிந்தனை, கோபம், புரட்சி, வீரம் , காதல், காமம் இப்படி என்னன்னவோ உணர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது ஆனால் இந்த நாவலில் வரும் ஈரம்மாள், மாதி, சித்தி மற்றும் மல்லி போன்ற சோளக பழங்குடி பெண்களுக்கு நடந்த கொடுரங்களை வாசிக்கும் போது ஒரு ஆணாக என்னை நான் வெறுத்து எனது உறுப்பை அறுத்து எரிய வேண்டும் என்னும் உணர்வே என்னுள் மேலோங்கியது. அந்த சித்திரவதைகளை என்னால் இங்கே விவரிக்க முடியவில்லை எழுத்தில் கூட அந்த கொடுமைகள் மீண்டும் நிகழ்ந்து விடக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் மனிதன் மகத்தான சல்லி பையல்
நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் இந்த சமகாலத்தில், ஒரு பகுதியில் சட்டம்,ஒழுங்கு,வனம் பாதுகாப்பு என்கிற பெயரில் அந்த மக்கள் மீது கற்பனை செய்ய முடியாத,மனித தன்மையே இல்லாத பயங்கரவாத செயலை போலிஸ் செய்து இருக்கிறது .அந்த மக்களை மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும்,பயமுறுத்துவதற்காக போலிஸ் மேற்கொள்ளும் நடைவடிக்கைகளும்,சித்திரவதைகளும், படிப்பவர்களின் இதயங்களை ரணமாக்கி விடுகிறது. இந்த போலிஸ்காரர்களா? இவர்களா மக்களின் நண்பன் என்று நினைக்கும் போது கண்கள் சிவக்கிறது.
வீரப்பனின் பிணத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் அக்கறையும்,போலிஸ் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு கொடுக்கவில்லை.அவர்களுக்கு ஆதரவாக எதுவுமே செய்யவில்லை.
வீரப்பனை சுட்டுக்கொன்றதற்கு பெரிய விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழாவெல்லாம் எடுத்து போலீஸ்களுக்கு பரிசு பணமும் நிலம்புலன்களும் கொடுத்தார்கள். யார் யாரோ கலந்துக்கொண்டு ஜனநாயகத்தையும், போலிஸ்காரர்களின் தியாகத்தை வீரத்தை பற்றியெல்லாம் பேசினார்கள்.ஆனால் அதில் ஒரு வாய் கூட போலிஸ் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று பேசவில்லை. என்ன செய்வது அந்த பழங்குடிகள் மக்களாகவே தெரியவில்லைப் போல இந்த ஓநாய்களுக்கு? பிறமொழியின் ஆட்சியில், இந்த மண்ணின் மொழியின் உரிமைகளையும், ஆதரவு குரல்களையும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?
இந்த நாவலை மீண்டும் என்னால் வாசிக்க முடியாது. அப்படி என்னால் வாசிக்க முடிந்தால் என்னை போல கொடூரமான மனம் படைத்தவன் யாரும் இருக்க முடியாது. தாய் முன், தந்தை முன், மகள் முன் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிச் செத்துப் பிழைத்த பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், இன்னும் வார்த்தைகளில் விவரிக்க இயலாத கொடுமைகளைச் சுமந்தவர்களே ‘சோளகர் தொட்டி’யின் கதை மாந்தர்கள். அவர்களின் சிலரை நான் பவா . செல்லத்துரை அவர்களின் பெருங்கதையாடலை கேக்க தாமரைக்கரைக்கு சென்ற போது நேரில் பார்த்தேன். அவர்களின் மீது கட்டவிழ்த்து வன்முறைகளில் தாக்கங்கள் இன்னும் அவர்களின் கண்களிலும், உடல்களிலும் தெரிகிறது
நாம் என்ன தான் அவர்களில் மீது வன்மத்தை கக்கி இந்த நாவலில் வரும் ஹிட்லரின் நாஜி முகாமை போன்ற பெரிய ஒர்க் ஷாப்களில் அடைத்து வதைத்தாலும் அதில் இருந்து எல்லாம் மீண்டு வந்து தங்கள் வாழ்க்கையை “காத்தவர் தின்னது போக, கண்டவர் தின்னது போக, கள்வர் தின்னது போக விளைய வேணும் சாமி” என்று அடுத்தவர்களில் (நம்மில்) இருந்து தான் தொடங்குவார்கள். அவர்களால் தான் நம்மை காப்பாற்ற முடியும்
✍️ கோடி
Comments
Post a Comment