திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா? - பெ. மணியரசன்.

வாசிப்பு 37


திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா?  - பெ. மணியரசன்.


.



திராவிடம் என்றால் என்ன ?

யார் எல்லாம் திராவிடர்..?


* தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் நிலப்பரப்பில் வாழ்பவர்கள் திராவிடர்கள், அவர்கள் திராவிட இனத்தை சார்ந்தவர்கள்.


*ஆரியர் அல்லாதவர்களை குறிக்கும் சொல் தான் திராவிடர், ஆரியத்தை எதிர்ப்பது தான் திராவிடம்.


*திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம், அதை பின்பற்றும் தமிழர்கள் தான் திராவிடர்கள்.


 *தமிழர்கள் தான் திராவிடர்கள்.

திராவிடர் என்றும் அழைக்கலாம் தமிழர் என்றும் அழைக்கலாம்.


*திராவிடம் என்பது வாழ்வியல்


*திட்டம் தான் திராவிடம்


எது வேணாலும் பேசுவது நரம்பு இல்லாத நாக்கு என்றால் எந்த பொருளையும் தனது என்று திருடி கொள்ளும்  பொருள் அற்ற ,தமிழே இல்லாத திராவிடம். அந்த திராவிடத்தாலும் அதை கொண்டு அரசியல் செய்தவர்களாலும் தமிழரின் மறுமலர்ச்சி வளர்ந்ததா அல்லது வழி மாறியதா என்பதை நன்கு ஆராய்ந்து வரலாற்று தரவுகளுடன் இந்த பொத்தகத்தில் பதிவு செய்துள்ளார் ஐயா தமிழ்த்தேசிய ஆசான் பெ.மணியரசன்


திராவிட இயக்கமும் பெரியாரும் இல்லையென்றால் தமிழர்கள் தற்குறிகளாகவும். அந்த இயக்கங்களையும் தலைவர்களையும் எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் நூலகம் பக்கம் கூட  செல்லாதவர்களாகவும் தான் இருப்பார்கள் என்று கூறும் தன் மோக இரசிப்புவாதிகள் இந்த பொத்தகத்தை படித்து பார்த்து தங்கள் வரையறுப்பை மறு ஆய்வுக்கு  உட்படுத்தட்டும்


பார்ப்பனியவாதிகள் தமிழர் மூளையில் வர்ணாசிரமம் போதையூட்டினார்கள். அப்போதையை நீக்கும் தமிழர் களத்திற்கு வந்த திராவிடவாதிகள், திராவிட ஒருமைவாதப் போதையை ஏற்றி விட்டார்கள். கடவுளை நீக்க வந்த பெரியாரியவாதிகள், கடவுள் இருந்த இடத்தில் பெரியாரை நட்டு வைத்துள்ளார்கள்.பகுத்தறிவைப் பரப்ப வந்த பெரியாரியவாதிகள், 'சொந்த புத்தி வேண்டாம். ஐயா தந்த புத்தி போதும்' என்றுகூறி, புதுவகை மூட நம்பிக்கையை பரப்பி விட்டார்கள்.பெரியார் பங்களிப்பை முற்றிலுமாக மறுக்கவில்லை. அதனை உரியவாறு ஏற்றுக் கொள்கிறோம். இனம், மொழி குறித்த அவரது தவறானக் கருத்துகளை ஏற்க வேண்டாம் என்கிறார் ஐயா மணியரசன்


பார்ப்பனர் ஆதிக்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில், பெரியாரின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் பலன்களையும் கொடுத்தது. அவரின் பங்களிப்பு மதிக்கத்தக்கது. ஆனால் பெரியார் இல்லையென்றால் தமிழர்கள் அனைவரும் இன்றைக்கும் ஆடுமாடு மேய்த்துக் கொண்டுதானிருப்பார்கள், பார்ப்பனர்களின் அடிமைகளாகத்தான் இருப்பார்கள்  என்று கூறுவது பாமரத்தனமானப் பகட்டுரையாகும். இது வரலாற்றின் இயக்கியலை மறுக்கும் மூடத்தனமாகும். தமிழர் வரலாற்றை முறையாக அறியாத நுனிப்புல் மேயும் கருத்தாகும்!


பெரியாரின் சிந்தனைகள் இன்று அளவும்  இந்த தேசியத்திற்கு தேவைப்படுகிறது  அதற்காக அவர் சொல்லுவது மட்டுமே சரி  மற்றவை எல்லா ம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லும் பெரியார் வழிபட்டாளர்களின் கருத்து இந்தத் தமிழ் தேசியத்திற்கு மிகவும் அபாயகரமானது. அப்படி ஒன்றும் பெரியார் தன் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் இல்லை.


புரட்சிகரமான மற்றும் முற்போக்குத் திட்டங்களையும் தொடுவது - பேசுவது, அடையாளப் போராட்டம் நடத்துவது அப்புறம், அம்போ என்று விட்டுவிட்டு அடுத்த அரசியல் நகர்வுக்குப் போய் விடுவது என்பதுதான் பெரியாரின் வழக்கம். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்புச் செய்திகளை மட்டும் தான் தொடர்ந்தார். மற்றவற்றை அந்தந்த நேரத்துக்கேற்ப பயன்படுத்திக் கொண்டார்.


அவர் எடுத்து கொண்டச் சொல் திராவிடமாவது இந்தத் தேசியத்திற்கு சம்பந்தப்பட்டச் சொல் என்றால் அதுவும் இல்லை"திராவிட" என்பது ஆரியர்கள் புனைந்து கொண்ட பெயர். ஆரியவர்த்தமாக அவர்களால் பெயர் சூட்டப்பட்ட வட நாட்டிலிருந்து விந்திய மலைக்குத் தெற்கே நகர்ந்த ஆரியர்களுக்கு ஆரியவர்த்த ஆரியர்கள் சூட்டிய பெயர் "திராவிட(ர்கள்) என்பது, தெற்கே நகர்ந்த ஆரியப் பிராமணர்களைப் பஞ்ச திராவிடர்கள் என்று வடநாட்டு ஆரியர்கள் அழைத்தார்கள். தமிழ்நாடு, தெலுங்கர் நாடு, கன்னடர் நாடு, மராட்டியர் நாடு. குஜராத்தியர் நாடு ஆகிய ஐந்து நாடுகளில் குடியேறிய ஆரிய பிராமணர்கள் பஞ்ச திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர்.மொழியியல் ஆய்வு செய்த கால்டுவெல், மனுதர்ம நூலிலிருந்து ‘திராவிட" என்ற பெயரை எடுத்தார். "திராவிட' என்ற பெயரில் ஒரு மூலமொழி இருந்தது என்று கற்பனை செய்தார் கால்டுவெல்.


தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியப் பிராமணர்கள் "திராவிட" என்ற பெயரைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார்கள். இவ்வாறு யாரை எதிர்த்து புரட்சி செய்கிறேன் என்று சொன்னாரோ அவர்களின் மொழியில் இருந்தேப் பெயரை எடுத்து தமிழர்களின் தலையில் கட்டியுள்ளார் பெரியார்.


பெரியார் தமிழர் இல்லை என்றால் வேறு யார் தமிழர் என்று கேட்கிறாராகள் . தமிழை இகழ்பவன் தமிழை தாய் மொழியாக கொண்டு இருந்தாலும் அவன் தமிழனாக இருக்க முடியாது.  அந்த வகையில் பெரியார் தமிழர் அல்லாதவர்கள்க்கு எல்லாம்  உச்சம் . பெரியாருக்கு முன்னும் பின்னும் அந்த அளவுக்கு தமிழை கொச்சைப்படுத்தி யாரும் இகழ்ந்தது இல்லை


பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தார் என்பதற்காக பெரியார் தமிழ் மொழியையும், தமிழர் வரலாற்றையும் இழிவுபடுத்துவதை ஏற்க வேண்டுமா? தமிழ் படிக்காதே. ஆங்கிலம் படி என்று அவர் கூறியதை எதிர்க்கக் கூடாதா? வெள்ளைக்காரர் ஆட்சியை ஆதரிப்பது, அதன் பிறகு காங்கிரசு ஆட்சியை ஆதரிப்பது, தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சி தோற்றபின் திமுக ஆட்சியை ஆதரிப்பது என்று பெரியார் ஆளும் அரசுக்கு ஆதரவாக இருந்து கொண்டு, 'புரட்சி" பேசிய போலித்தனங்களை ஆதரிக்கவேண்டுமா? கூடாது!


பெண்ணுரிமையை வலுவாகப் பேசினார் பெரியார். அத்திசையில் பாராட்டிற்குரிய பல செயல்கள் செய்தார். தாலி கட்டாத திருமணங்களைச் செய்வித்தார். அதேசமயம், பெண்கள் ஆண்களைப் போல் கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும். பூ வைத்துக் கொள்ளக் கூடாது, பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது, பெண்கள் கருப்பையை வெட்டிக் கொள்ள வேண்டும். என்பன போன்ற அறிவியலுக்கும்,  உளவியலுக்கும் முரணான கருத்துகளையும் முன்வைத்தார்.


பெரியார் ஆணின் அழகியல் உணர்வு வேறு; பெண்ணின் அழகியல் உணர்வு வேறு. பூவும் பொட்டும் வைத்துக் கொள்ளாமல், கிராப் வெட்டிக் கொள்ளும் பெண்கள் நிறைந்த நாடுகளில் பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிடவில்லை. மேற்குலகில் நம் நாட்டுடன் ஒப்பிடும்போது, பெண்ணுரிமை கூடுதலாக இருக்கக் காரணம் அச்சமூக வளர்ச்சி! கருப்பையை நீக்கிவிட்டால், மனிதகுல வளர்ச்சியே கிடையாது!


மண்ணின் மக்களாகிய தமிழர்களை இழிவுபடுத்திக் கொட்டமடித்த மிகக் கொடிய ஆரியப் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துக் கடும் போராட்டங்களைப் பெரியார் நடத்தினார்; கருத்துப் போர் நடத்தினார். இதனால், பெரியார் எது சொன்னாலும் நம் நன்மைக்குத்தான் சொல்வார் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் ஏற்பட்டது. இந்த நம்பிக்கையைப் பெரியார் தவறாகப் பயன்படுத்தி, தமிழர் என்ற மரபுவழி இனப்பெயரை மாற்றினார். பெரியாரின் பிராமண ஆதிக்க எதிர்ப்பை மனத்தில் இருத்திக் கொண்டு, அவரின் தமிழின மறைப்பு, தமிழ் மொழி எதிர்ப்புக் கருத்துகளைத் தமிழர்கள் பொறுத்துக் கொண்டார்கள். பெரியாரின் பகுத்தறிவுப் பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர்கள் "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்பது போல் ஆமாம், ஆமாம், தமிழ் காட்டுமிராண்டி மொழிதான், ஆங்கிலமே அறிவு மொழி; தமிழன் என்பது மாசுடையப் பெயர், திராவிடன் என்பதே தூயக் குருதிப் பெயர் என்று களித்தனர் என தக்க சான்றுகளோடு இந்த பொத்தகத்தில் நிறுவுகிறார் ஐயா பெ.மணியரசன்


"திராவிடம் என்ற போலித் தேசியத்தை அகற்றாமல் அசலான தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்த முடியாது என்பதைத் தமிழ் இன உணர்வு கொண்ட பெரியாரியல் தோழர்களும் நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும். தேசியத்திற்கென சமூக அறிவியல்படி அமைந்துள்ள அடிப்படை வரையறுப்பின் மேல் நிறுத்தப்படும் தமிழ்த்தேசியமே பகை வெல்லும். இயற்கையான தமிழ்த்தேசியத்துடன் செயற்கையான திராவிடத்தைக் கலப்பது தன்னைத் தானே வீழ்த்திக் கொள்ளும் கலப்படக் கருத்தியலாகும். போர்க்களத் தேரில் ஒரு பக்கம் குதிரையையும் இன்னொரு பக்கம் குதிரை போல் தோன்றும் இன்னொரு விலங்கையும் பூட்டினால் அந்தத் தேர் ஓடுமா? போரில் பகைவனை வெல்ல அது பயன்படுமா?


தெளிவான கொள்கை வரையறுப்பு இல்லாமல் செய்கின்ற ஈகங்கள் வீணாகி விடும். 1938லும் 1965லும் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் மாபெரும் ஈகங்கள் நடந்தன. 1965இல் 300 பேருக்கு மேற்பட்ட தமிழர்கள் காங்கிரசு ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  10 பேர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடித்தனர். ஆனால் அந்த ஈகத்தின் பயனைத் தமிழகம் பெறவில்லை. இங்கு நடந்ததுபோல் எந்த உயிர்த் தியாகமும் நடைபெறாத கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்ளில் முறையே கன்னடமும் மராத்தியும் பள்ளிக் கல்வி வரை கட்டாய மொழிப்பாடமாக்கப்பட்டுள்ளன.

இங்கு இன்னும் நாம் அந்த நிலையை அடையவில்லை! காரணம், 1938, 1965 போராட்டங்களில் நம் தலைவர்கள் முன்வைத்த “இந்தி வேண்டாம், ஆங்கிலம் வேண்டும்' என்ற தவறான மொழிக் கொள்கைதான்! இந்தித் திணிப்பு எதிர்ப்பில்கூட பெரியார் முன்னுக்குப் பின் முரணான நிலை எடுத்தார். 1938 மற்றும் 1948இல் இந்தித் திணிப்பை எதிர்த்த பெரியார் 1965இல் நடந்த மாபெரும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்தது மட்டுமின்றி இந்தித் திணிப்பை ஆதரிக்கவும் செய்தார்.


இவ்வாறாக தமிழர்களையும் அவர்களின்  வளர்ச்சியையும் மடைமாற்றி  பிறமொழியாளர்களுக்கு  அடிமையாக்கி  இன்னும் தமிழர்களை சலுகைக்கு கையேந்த வைத்து உரிமையை பறித்துக்கொண்டு இருக்கிறது இந்த போலி திராவிடம்


“கிளம்பிற்றுக் காண் தமிழர் சிங்கக் கூட்டம் அது கிழித்தெறியத் தேடுதுகாண் பகைவர் கூட்டத்தை"                    


                - புரட்சிப்பாவலர் பாரதிதாசன்


💪கோடி


(குறிப்பு: இந்த பொத்தகத்தை பொய் என்றும் வெற்று புலம்பல் என்றும் தக்க சான்றுகளோடு நிருபித்து காட்டுபவர்கள்க்கு ₹1500 பரிசு அளிக்கப்படும்)

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு