கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி - இந்துமதி கணேஷ்

 

வாசிப்பு 36


கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி - இந்துமதி கணேஷ்




காதல் என்னும் ஒரு

மாயவலையில் 

சிக்கிக்கொண்டால்

ஆயுள் வரை சிறை.

இது இளமையின் வண்ணம்

எல்லாம் காட்டும் திரை

சிலர் இதயத்தில் வண்டாய்

மாறிப் போடும் துளை


வண்டுகள் துளைப்போடுவது ஒன்றும் ஆச்சிரியம் இல்லை ஆனால் இங்கே காகிதப் பக்கங்கள் நம் இதயத்தில் துளைப் போடுகின்றன .எழுத்துகள் நம்மை மாயவலை விரித்துச் சிறை வைக்கிறது, சொற்களை வாசிக்கும் போது காதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, கடந்து வந்த இளமையின் நினைவுகளை வண்ணங்கள் கூட்டி திரையிட்டுக் காட்டுகிறது. இதை எல்லாம் செய்யும் மாயாவி யார்?  கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி என்ற மாயக்கோலை வைத்து நம்மை ஆட்டிப்படைக்கும் அந்த மாயாவி நம் தோழி இந்துமதி கணேஷ்.


உங்களுக்கு எத்தனை வயது ஆகி இருந்தாலும் , காதுரோத்தில் வெள்ளை முடி மின்னினாலும், பற்கள் எல்லாம் நடனம் பழகி கொண்டு இருந்தாலும். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் போது உங்கள் வயது 20லிருந்து 25க்கு உள்ளே தான் இருக்கும். கோல் ஊன்றி நடக்கும் கிழவனும்  கோலை வீசி குலுங்கி நடப்பான். அந்த அளவுக்கு  இந்துமதியின் ஒவ்வொரு வரிகளும் இளமை தளும்புகிறது. வார்த்தைக் கோர்வையும். அங்கே அங்கே சரியாக சேர்க்கப்பட்ட கவிதைகளும் சினிமா வசனங்களும்  சங்க இலக்கிய பாடல்களும்  நம்மை மெய்மறக்க செய்கிறது.காதலிக்காதவர்கள் அல்லது காதலிக்கப்படாதவர்கள்  இந்தப் புத்தகத்தை படித்து முடித்தவுடன்  அவர்களை காதல் உணர்வை தூண்டி கனவு உலகத்தில் உலாவ விட்டக் குற்றத்திற்காக எழுத்தாளர் இந்து மீது வழக்கு தொடுக்கலாம்,  எதுக்கும் முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொள்வது நலம் இந்து.


நறுமுகை, ஆதவன் என்னும் புனைப்பெயரில் இணையத்தில் அறிமுகமாகி  பிறகு தொடரி வண்டியில் சந்தித்துக்கொள்ளும் கவின்மலர் மற்றும் சூர்யாவும் தான் இந்தக் கதையின் நாயகன், நாயகி. அவர்களுக்கு நண்பர்களாக வந்து காதலர்களாக மாறும் ப்ரியா மற்றும் மனோவும் கதையின் இரண்டாம் நாயகன், நாயகி. ஒவ்வொருப்  பக்கமும் துளியும் ஆபாசமற்ற காதலின் தேன் சுவை நம்மை  ஈர்க்கிறது , வரலாற்றில் முதல்முறையாக வில்லன்களே இல்லாத  காதல் கதையாக படைத்து உள்ளார்  ஆசிரியர் இந்து . 


கவின் மலரின் தோழியாக வரும் சத்தியாவும், சூர்யாவின் நண்பன் திருமணத்தில் சுட்டிப் பெண்ணாய் தோன்றும் சுஜாவும் கதையின் திருப்பு முனையாக இருப்பார்கள் என எதிர்பார்க்க வைத்துப் பிறகு நயன்தாரவை ப் போல ஒரு ஓரத்தில் தலையை மட்டும் காட்டி  ஏமாற்றம் அளித்து செல்கிறார்கள்.மனோ மற்றும் ப்ரியாவின் காதலை இன்னும் விரிவாகவும் தெளிவாகவும் காட்டி இருக்கலாம்.பெண்ணைப் புரிந்து கொள்ளும் மலரின் தாய் தந்தை கதாபாத்திரம் நம்மை வியக்க வைக்கிறது அதேவேளை சூர்யாவின் தாய் தந்தை கதாபாத்திரங்களை சரியாகக் காட்சிப்படுத்தவில்லை இது போன்ற குறைகள் அனைத்தையும் தனது எழுத்து வலிமையால்  நம்மை மறக்கச் செய்கிறார் ஆசிரியர் இந்து கணேஷ். 


ஒவ்வொரு அத்தியத்தையும் படித்து முடிக்கும்  போது அடுத்து என்ன நடக்கப் போகிறது என பரப்பரப்பு தொற்றிக் கொள்ள செய்கிறது  அந்த அத்தியங்களை முடித்து இருக்கும் விதம் . நான் புன்னகை சிந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை திருப்பியது என் வாசிப்பு அனுபவத்திலேயே இது தான் முதல் முறை. ஆறாத மனக் காயங்களை ஆற்றி விடும் அற்புத மூலிகை போல் ஒரு காதல் கதை.


காதல் செய்யும் காதலர்களுக்கும் , காதல் தேடும் மாணவர்களுக்கும் இந்த காதல் கதை ஒரு உற்சாக மருந்து. மேலும் கட்ட பிரமச்சாரிகளும், சந்நியாசம் பெற நினைக்கும் இளம் சாமியார்களும் , என்னவனாலும் நான் மொராட்டு சிங்கிள் டா என்னும் சூளுரைத்தவர்களும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் மீறி படித்து விட்டு பார்க்கும் இடம் எல்லாம் காதல் பெருக்கெடுத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.


✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு