திணிக்கப்பட்டதா திராவிடம்? - விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

 வாசிப்பு 34



திணிக்கப்பட்டதா திராவிடம்? -  விழுப்புரம் கோ.செங்குட்டுவன்






திராவிடம் என்றால் என்ன? மொழியா? இனமா? இடமா? அது எங்கு இருந்து வந்தது? தமிழிலேயே இல்லாத சொல்லை வைத்து கொண்டு எப்டி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆள  முடிந்தது? இப்படி திராவிடத்தின் வேரை தேடி சென்றால் நமக்கு கிடைப்பது எல்லாம் இது போல  எண்ணற்ற கேள்வி குறிகள் தான். இந்த கேள்விகளுக்கு எல்லாம் விளக்கமான விடையை விழுப்புரம் கோ.செங்குட்டுவன் அவர்கள் "திணிக்கப்பட்டதா திராவிடம்? "என்று தனது புத்தகத்தின்  வழியாக  நமக்கு சொல்கிறார்.


திராவிடம் 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் ஆங்கிலத்தால் பரவலாக்கப்பட்ட வடசொல் 20-ஆம் நூற்றாண்டில் தழைத்து வளர்ந்து, இன்று கிளைப்பரப்பி நிற்கிறது. கடந்த நூற்றாண்டில் தமிழ்மண்ணின் இருபெரும் அரசியல் ஆளுமைகள் தான் இந்த கருத்தியலை இங்கு ஆழ அகலப் பரப்பியவர்கள்.


தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் திராவிடத்திற்கு ஒரு தலைமுறையே ஆட்பட்டிருந்தது .அடுத்து வந்த தலைமுறைக்கும் அதன் பாதிப்பு இருந்தது.தற்போதைய தலைமுறை இதிலிருந்து விடுபட யோசிக்கிறது. அதுவும் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த யோசனை மிக தீவிரமாக செயல்பட ஆரம்பித்து இருக்கிறது.


இது என்ன, திராவிடம் ? சங்க இலக்கியங்களில் எங்காவது இந்த சொல் இருக்கிறதா? சரி, சங்கம் மருவிய இலக்கியங்களில் அல்லது பக்தி இலக்கியங்களிளோ இருக்கிறதா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை.


18-ஆம் நூற்றாண்டில் தாயுமானவர்தான் மொழியிலே வல்லான் ஒருத்தன் வரவுந் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்' என எழுதியிருக்கிறார். அதாவது, வடமொழிப் பண்டிதர்கள் வந்தால் எனக்குத் திராவிடமும் தெரியும் என்று (அவர்கள் மொழியிலேயே) சொல்வார்களாம்! ஆனால், சமஸ்கிருத இலக்கியங்களில் கி.பி.ஏழாம். நூற்றாண்டிலேயே 'திராவிட' இடம்பெற்றுள்ளது. குமாரில பட்டர் ஆந்திர திராவிட பாஷா' என்கிறார். கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிசங்கரர், ஞானசம்பந்தரை 'த்ராவிட சிசு' என்றழைக்கிறார். மனுஸ்ருமிதி, மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'தென்னிந்திய நிலப்பகுதியைக் குறிக்க, வடஇந்திய சமஸ்கிருத இலக்கியவாதிகள் பொதுவாகப் பயன்படுத்திய வார்த்தைதான் 'திராவிடம் 'என்பார் தமிழ் ஆராய்ச்சி நூலாசிரியர் எம்.சீனிவாச ஐயங்கார். கி.பி.6ஆம் நூற்றாண்டில் மதுரையில் திரமிள சங்கம் எனப்படும் சமணச் சங்கம் இயங்கியதாக ஆய்வாளர் மயிலை சீனி.வேங்கடசாமி தெரிவிக்கிறார்


இந்த திராவிட கருத்தியல் எங்கு இருந்து தொடங்கியது என்று தேடினால் அந்த தேடல் கால்டுவெலிடம் போய் நிற்கிறது.தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கண ஆய்வில்  ஈடுபட்ட பிஷப் கால்டுவெல், தனது முடிவுகளை 1856-இல் வெளியிட்டார். இதில் இந்த மொழிக் குடும்பத்திற்குத் 'திராவிட’ எனப் பெயர் சூட்டினார். இம்மொழிகளைப் பேசுவோர் 'திராவிடர்' என்றும் வரையறுத்தார். 'த்ரவிடம் எனும் சமஸ்கிருதச் சொல்தான் தமிழ் எனத் திரிந்தது' என்பது கால்டுவெல்லின் முடிவு. இதற்குப் பிறகுதான் திராவிடம் அல்லது திராவிடத்தின் பரவலாக்கம் தமிழ்மண்ணில் தொடங்கியது.


'தமிழ் எனும் சொல்லே, வடமொழியில் திராவிட எனத் தன்னுடைய திரிந்தது' என்பார் தேவநேயப் பாவாணர். தாயுமானவர் பாடலில் திராவிட எனும் சொல்லைப் பயன்படுத்தி இருப்பது பற்றித் 'தமிழே திராவிடம் என்பதை உட்கொண்டே சொல்லியிருப்பதாக' விளக்கமளித்துள்ளார் பாவேந்தர்.


'தமிழுக்கான மாற்றுச்சொல், தமிழக, ஆந்திர, கர்நாடக, கேரளப் பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு, பார்ப்பனிய மேலாண்மைக்கு எதிராக உயர்த்திப் பிடிக்கப்பட்ட கருத்துநிலை ஆகிய மூன்று அடிப்படைகளில் மட்டுமே திராவிடம் என்ற சொல் இருபதாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை ஆளப்படுகிறது" என்கிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.


'தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே குறித்த சொல்தான் திராவிடர் என்பது. கெடுவாய்ப்பாக, பிற்காலத்தில் மரபு வழிப்பட்ட மண்ணின் மக்களைக் குறிப்பதாயிற்று என்று சொல்லும் பிரித்தானிய கலைக்களஞ்சியத்தை' பெ.மணியரசன் மேற்கோள் காட்டுகிறார்.


'திராவிடம் என்ற சொல்லை 13ஆம் நூற்றாண்டு இருந்து முதலே வடமொழி நூல்களிலேதான் தென்னகத்து மக்களைக் குறித்து வழங்கியிருக்கிறார்கள். அந்தச் சொல் தமிழ்நாட்டில் உருவானச் சொல்லாகத் தெரியவில்லை' என்று சொல்லும் ஆய்வாளர் தொ.பரமசிவன், 'ஆனால் திராவிடமொழி பேசுகிற தென்னாட்டு மக்களைக் குறிக்கக் கூடியதாகவும் இந்தச் சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது' என்றும் தெரிவிக்கிறார்.


தென்னிந்தியாவில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் ஆதிதிராவிடர் என்ற தீர்மானம்  நிறைவேற்றப்பட்ட போது 

சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு, கன்னடம் பேசும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிதிராவிடர் எனும் பெயரை ஏற்க மறுத்தனர். தாங்கள் ஆதித்தெலுங்கராகவும், ஆதி கன்னடராகவும் அழைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால், இந்தப் பெயர் மாற்றம் தமிழ் மாவட்டங்களில்தான் அமுலில் இருக்குமென்று அரசு தெளிவுப்படுத்தியது. மேலும், தெலுங்கு மாவட்டங்களில் ஆதி ஆந்திரர் என்றும், கன்னட மாவட்டங்களில் ஆதிகன்னடர் என்றும் வழங்கிவரும் என்று அரசு உறுதி கூறியது.


இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள ம.பொ.சிவஞானம், அந்தப் பிரதேசங்களில் மொழிப்பற்றும், இனப்பற்றும் உடைய தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிடர் என்னும் பொதுப்பெயரை ஏற்க உறுதியாக  மறுத்துவிட்டனர். இந்த இனப்பற்றும், மொழிப்பற்றும்  தமிழ்நாட்டினருக்கும் இருந்திருக்குமானால் இங்குள்ள தாழ்த்தப் பட்டோருக்கு ஆதித்தமிழர் என்ற பெயர் அன்றே தரப்பட்டிருக்கும் என்கிறார்.


1912-இல் சென்னையைச் சேர்ந்த டாக்டர்.நடேசனார், சென்னை திராவிடர் சங்கம் (Madras Dravidan Association) எனும் அமைப்பை நிறுவியிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் திராவிடர் அரசு தோன்ற வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்த டாக்டர் நடேசனார், 1916 நவம்பர் 20-இல் விக்டோரியா ஹாலில் மாநாடு ஒன்றை நடத்தினார். அந்த மாநாட்டில், கூட்டுப்பங்கு நிறுவனம் (ஐாய்ண்ட் ஸ்டாக் கம்பெனி) நிறுவ தீர்மானிக்கப்பட்டது. இதற்குத் தென்னிந்திய மக்கள் சங்கம் (சவுத் இந்தியன் பெயரிடப்பட்டது. பீப்ள்ஸ் அசோசியேஷன்) என்றும் பெயரிடப்பட்டது.


இந்த நிறுவனமானது அடுத்த ஒருமாதத்தில் அரசியல் அமைப்பாக உருமாறியது. அமைப்பின் பெயர், ஸவுத் இண்டியன் லிபரல் பெடரேஷன். தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் பிராமணரல்லாதார் இயக்கம்-ஜஸ்டிஸ் பார்ட்டி- என்றெல்லாம் அழைக்கப்பட்ட நீதிக்கட்சியின் மூலவூற்று இது.


நீதிக்கட்சிக்கு அடித்தளமிட்ட டாக்டர் நடேசனார் அக்கட்சியின் ஆட்சியில் ஒருமுறைகூட அமைச்சர் பதவியில் அமர முடியவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.சட்டசபைத் துணைத்தலைவர் பதவியும் கூட அவரது இறுதிக்காலத்தின்தான் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை நகராட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பது டாக்டர் நடேசனாரின் கனவு. அது இறுதிவரை நீதிகட்சியினரால் நிறைவேற்றப்படவில்லை.


'ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியில் ஏ.சுப்பராயலு ரெட்டி (7.12.20 முதல் 11.7.21 வரை), பனகல் அரசர் (19.12.23 முதல் 3.12.26 வரை), பி.முனுசாமி நாயுடு (27.10.30 முதல் 4.11.32 வரை), பொப்பிலி அரசர்( 5.11.32 முதல் 1.4.37 வரை), சர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (1.4.37 முதல் 14.7.37 வரை) ஆகிய ஆந்திரர்களே முதல்வர்களாக இருந்திருக்கின்றனர்' என்று சொல்கிறார் ம.பொ.சி.


1916இல் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதிலிருந்து 1936இல் அந்தக் கட்சியின் ஆட்சி அஸ்தமித்தது வரையுள்ள 17 ஆண்டுக் காலத்திலே சுத்தத் தமிழர் எவரும் அந்தக் கட்சியின் தலைவர் பீடத்தில் ஏறியதில்லை. அது சட்டமன்ற எதிர்க்கட்சியாக இருந்த போதும் அதன் தலைமை ஆந்திரரிடமே இருந்தது' என்றும் சொல்கிறார்.


மேலும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, அரசுத் தலைமைச் செயலாளர், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், பல்கலைக் கழகப் பதிவாளர், ரெவின்யூ போர்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு முதன் முதலாகத் தென்னிந்தியர் நியமிக்கப்பட்ட போதெல்லாம் அவர்களிலே பிராமணரல்லாதாராக வந்தவர்கள் அவ்வளவு பேரும் தமிழரல்லாதாராகவே இருந்தனர் என்பதற்கான புள்ளி விவரங்களைத் தனது 'தமிழகத்தில் பிறமொழியினர்' எனும் நூலில் ம.பொ.சி. தந்திருக்கிறார்.


இப்படி பிறமொழியாளர்களால்  அவர்களின் நல்வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கட்சி பெயர் மாற்றத்துடன் இன்றுவரை இயங்கி கொண்டு தமிழர்களின் பெருமைகளை அழித்து வருகிறது. 


திராவிடம் என்று சொன்னாலே பெரியாரை  தவிர்த்து பேசமுடியாது. சமீபத்தில் திராவிட ஸ்டாக்  என்ற ஒரு பதிப்பகம் "இவர் தமிழர் இல்லை என்றால் வேறு யார் தமிழர்" என்ற தலைப்புக் கொண்ட புத்தகத்தை அறிமுகம் செய்தது  ஆனால் நான் சொல்லுகிறேன் பெரியார் தமிழர் என்றால் நாங்கள்  தமிழர்கள் இல்லை அதற்கான காரணங்களை பார்ப்போம்


பெரியாரை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன் .


 1) சமூக நீதி , பெண் சுதந்திரம்,தேவதாசி முறை ஒழிப்பு,சாதி ஒழிப்பு போன்றவற்றில் அவர்  உறுதியாக இருந்தார்.


2)  மொழி, இனம் , தமிழர் பெருமை போன்றவற்றில் அவர் உறுதியாக இல்லாமல் முன்னுக்கு முரணாக பேசி வந்தார்


இவற்றில் முதலவாது போற்ற கூடியது ,பின்பற்ற கூடியது. ஆனால் இரண்டாவது அறவே  ஒதிக்கி உதறி தள்ள வேண்டியது.


1938 ல்  ஆச்சாரியார் கொண்டு வந்த கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழ்நாடே போர்க்கோலம் பூண்டிருந்தது. அப்போது குடியரசு இதழில் 23.10.1938 அன்று பெரியார் எழுதிய கட்டுரையில்


"மானமிழந்தோம். 'உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப் பூசை செய்கிறோம். மலத்தை மனதார முகருகிறோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத்தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி, நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக-வடநாட்டானுக்கும். தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது, தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள்!


உங்கள் கைகளில், தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சைக் குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடு தோறும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்! புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னாபின்னமாக்குங்கள்! தமிழ்நாடு தமிழருக்கே!" என்று முழங்கினார்


இதற்கிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாகக் கைது செய்யப்பட்ட பெரியாருக்கு 6.12.1938-இல் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


அதே நேரம் 1938 டிசம்பர் 29,30,31 ஆகிய நாட்களில் சென்னையில் நீதிக்கட்சியின் 14-ஆவது மாநாடு கூடியது. இம்மாநாட்டில் நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியார் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 167 நாட்களுக்குப் பின், 1939 மே மாதம் 23ஆம் தாளில் பெரியார் விடுதலை செய்யப்பட்டார். நீதிக்கட்சித் தலைவராக அவரது பணி தொடர்ந்தது.


நீதிக்கட்சித் தலைவரான பின்பு பெரியாரின் குரலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. முன்பு தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசியவர், இப்போது திராவிடநாடு குறித்தும், 'திராவிடநாடு திராவிடருக்கே' என்றும் பேசத் தொடங்கிவிட்டார்.மேலும் தமிழை மிக இழிவாக பேசியும் வந்தார். அவற்றில் சில :


1) நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம். சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தைத் தமிழில் பாட கொண்டு இருக்கிறோமே! சரி! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு  என்ன வேண்டும்?...தமிழ் காட்டுமிராண்டி காலத்து மொழி. நாகரிக  காலத்துக்கு, பகுத்தறிவு காலத்திற்குத் தமிழ்ப் பயன்படுமா?" (விடுதலை என தலையங்கம் 16.3.1967)


2) உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப்பழகுங்கள். பேசமுயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். என்னை வையாதீர்கள். மனிதனாக வாழ முயலுங்கள்.' (விடுதலை அறிக்கை 27.1.1969)


இப்படி எல்லாம்  தமிழை தமிழர்க்கு நல்லது செய்கிறேன் என்ற போர்வையில் இழிவு செய்த பெரியார் தமிழர் என்றால்  தேவநேய பாவாணர் முதல் நான் வரை தமிழர்கள் இல்லை


சரி அவர்கள் கொள்கையான திராவிட நாடு என்பதிலாவது உறுதியாக இருந்தாரா பெரியார்? . பால் பொங்கி வரும் போது பானையை உடைத்து உள்ளார். அது என்ன? :


திராவிடநாடு கோரிக்கையைத் தி.மு.க. உச்சரித்துக் கொண்டிருந்த நேரம் அது. மத்திய அரசும் கூட, மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்குத் தீவிரம் காட்டி வந்தது. இதுபற்றி அமைக்கப்பட்ட 'பசல்அலி கமிஷன்' தனது அறிக்கையை  தயார் செய்திருந்தது. அந்த நேரத்தில் பிரதமர் நேருவிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்தது: 'தட்சிண (தெற்கு) ராஜ்யம், உத்திர (வடக்கு) ராஜ்யம், மேற்கு ராஜ்யம், கிழக்கு ராஜ்யம், மத்திய ராஜ்யம் என இந்தியாவை ஐந்து ராஜ்யங்களாகப் பிரிப்பது. இதில் தட்சிண ராஜ்யம் என்பது, தமிழ்நாடு. கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மொழி நாடுகளைக் கொண்டதாகும்.


இத்திட்டத்தினைப் பெரியாரும் அண்ணாவும் கடுமையாக எதிர்த்தனர். ‘தட்சணப் பிரதேச அமைப்பைத் தமிழ்நாட்டவர்கள் முழுமூச்சுடன் உயிரைக் கொடுத்து எதிர்ப்பார்கள் என்பதையும், அதனால் அண்மையில் வரும் தேர்தலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட நேரலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என அறிவித்தார். பெரியார். (விடுதலை அறிக்கை 01.3.1955).


தி.க.வும் சரி, தி.மு.க.வும் சரி அந்த நாளில் சென்னை ராஜ்யத்தை மட்டுமே திராவிட நாடாகச் செய்ய விரும்பின. பிரதமர் நேரு முழு அளவு திராவிட நாட்டையே படைத்துக் கொடுக்க முன்வந்தார். ஆம், சென்னை ராஜ்யம் மட்டுமேயன்றி, ஆந்திரம், திருவிதாங்கூர்-கொச்சி, மைசூர், ஐதராபாத் (மராத்தி மொழி மாவட்டங்கள் நீங்கலாக) ஆகியவற்றையும் சேர்த்து முழுத் திராவிடம் படைக்கப் போவதாக அறிவித்தார்.


அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை இந்திய யூனியனிலிருந்து பிரிக்கும் கிளர்ச்சியைத் தொடர்ந்து நடத்தியிருக்கலாம். ஆனால் தி.க.வும், தி.மு.க.வும் தட்சிணப் பிரதேசத்தை ஏற்க மறுத்து, திராவிட ஒருமைப்பாட்டையே எதிர்த்தன. தி.க.வும் சரி, தி.மு.க.வும் சரி நான்கு மொழிப் பிரதேசங்கள் கொண்ட திராவிடத் தனிநாடு கிடைக்கும் என்று நம்பியிருந்தால், அதனை உண்மையாகவே அவர்கள் விரும்பியிருந்தால் நேரு வழங்க விரும்பிய தட்சிணப் பிரதேசத்தை அவர்கள் எதிர்த்திருக்கக் கூடாது. நன்றியுணர்வோடு ஏற்றிருக்கவும் வேண்டும்.


ஒரு அரசியல் கட்சி தனக்கு வரவிருந்த மகத்தான வெற்றியைத் தன் கையாலேயே அழித்துவிட்ட புதுமைக்கு தி.க.வும் தி.மு.க.வும் முன்மாதிரியாகி விட்டன.


தி.க., தி.மு.க. தலைவர்களின் மனமாற்றத்திற்குக் காரணம் உண்டு. தட்சிண ராஜ்யம் அமைந்தால் திரு.காமராசர் முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது. நீடிக்க விடமாட்டார்கள், ஆந்திரரும் கேரளரும். அதனால் நேருவின் திட்டத்தைத் திரு.காமராசர் விரும்பாதவரானார். திரு.காமராசரைக் காப்பாற்றுவதற்காகத்தான் பெரியார் ஈ.வெ.ரா. தட்சிண ராஜ்யத் திட்டத்தை எதிர்க்க முன் வந்தார். ஆம், தனிநபரின் தயவுக்காக லட்சியத்தைக் கைவிட்டார் பெரியார்.


இதனை அண்ணா எதிர்த்ததுக்கு காரணம், ஆந்திர,கேரள, கன்னட இனங்களால் ஆதரிக்கப்படாததால் தாங்கள் கோரிவரும் திராவிடத் தனியரசு அடைய முடியாத கானல் நீர். அடைந்தாலும், அந்தத் திராவிட நாட்டிலே தங்கள் கழகம் அதிகாரத்திற்கு வரமுடியாது என்பது அறிஞர் அண்ணாவுக்கும் தம்பிமார்களுக்கும் தெளிவாகத் தெரிந்திருந்தது.


பெரியாரும் அண்ணாவும் முன்னெடுத்த திராவிட இயக்கம் முற்றிலும் தமிழர்க்கான இயக்கமன்று. தமிழரையும் ஒரு கூறாக இணைத்துக் கொண்ட தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோருக்கான ஒரு கூட்டு இன இயக்கம். அதை வெளியே சொல்வது உசிதமல்ல என்று கருதி, திராவிடம் என்றால் அதில் பார்ப்பனர் வர முடியாது, திராவிடர் என்பதுதான் இனப்பெருமை என்றெல்லாம் கூறி, ஒப்பனை வேலை செய்தார்கள்' எனும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசனின் விளக்கமும் இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது.


சங்க இலக்கியங்களில் இல்லை. சங்கம் மருவிய இலக்கியங்களிலும் இல்லை. பக்தி இலக்கியங்களில் கூட இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆளப்படாத ஒருசொல். கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரின் மூலம் பரவலாக்கப்படுகிறது. அது, கடந்த நூற்றாண்டில் பெரியார், அண்ணா எனும் இரண்டு அரசியல் ஆளுமைகளால் தமிழக அரசியல் உலகில் திணிக்கப்பட்டதே திராவிடம்


தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, தமிழ்ப் பண்பை தாய்ப் பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே என்பது ஜாதி மத பேதமற்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், திராவிடர் யார்? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருந்து வருகிறது.


இங்கே சில திராவிடர்கள் வந்து திராவிடத்தலும், பெரியராலும் படித்து விட்டு  அவரையே எதிர்த்து கேள்வி கேக்கிறாயா? என்று என்னை பார்த்து கேட்கலாம். சரி நீங்கள் சொல்லுவது போல அவரால் தான் நான் படித்தேன் என்று வைத்துக் கொள்ளலாம் .படிக்க வைத்தார் அறிவு வந்து விட்டது கேள்வி கேக்கிறேன் பதில் சொல்லுங்கள் ! 


காலாவதி ஆகி விட்ட மருந்துக்கு நீங்கள் வேண்டுமானால் விற்பனையாளர்களாக இருக்கலாம். என் தமிழ் இனத்தை அந்த வேலையில் இனி உங்களால் அமர்த்த முடியாது


"வடமொழியை நட்பாகக் கொள்ளும் திராவிடத்திற்கும் பகையாகக் கொள்ளும் தமிழிற்கும், ஒரு சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது. ஆதலால் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றித் திராவிடம், திராவிடன், திராவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது. திராவிடம் ஆரியமும் முக்காலாரியமு மாதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போல் கெட்டுப்போம். பின்பு தமிழு மிராது. தமிழனு மிரான். இந்தியா முழுவதும் ஆரியமாய் விடும். '(நூல்: தேவநேயம் தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரன்)"


"திராவிடம் என்பது திணிக்கப்பட்ட  தீது"


💪கோடி


https://www.bookmybook.in/product/thinikkappattadha-dhiravidam/

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு