இதுவே சனநாயகம்! - தொ.பரமசிவன்

 

வாசிப்பு 33

இதுவே சனநாயகம்! - தொ.பரமசிவன்






இதுவே சனநாயகம்! - தொ.பரமசிவன்


தமிழர்களின் வழிப்பாடான நாட்டார் வழிபாடு என்று சொல்லப்படும் குலதெய்வ வழிபாடு என்றாலே அதை எதிர்க்க திராவிடர்களும், ஆரியர்களும் கை கோர்த்து கொள்வார்கள். ஒருவர் சிறுதெய்வ வழிபாடு என்று இழிவு செய்வார்,இன்னோருவர் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் குலதெய்வ வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என்பார். ஆனால் ஐயா தொ.பரமசிவன் அவர்கள் திராவிட இயக்கத்தில் இருந்தாலும் அதை மக்களின் தெய்வங்கள் என்று போற்றுவார். தன் ஆய்வுகளில் கிடைத்த உண்மை  என்னவோ அதை அப்படியே எந்த வித மாற்றமும் இல்லாமல் பதிவு செய்பவர்.அதனாலேயே அவரின் புத்தகம் என சொன்னாலே எனக்குள் ஒரு பசுமை போர்த்திய குளிர்ச்சி எற்படும்.முக்கியமாக இந்த புத்தகத்தில் வருணாசிரமம் விசயநகரப் பேரரசர்களால் இங்கே இந்துத்துவத்திற்குக் கால்கோல் இட்டது என்ற வரலாற்று உண்மையை பதிவு செய்தது எனக்கு என் வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது


பெரியார்,அண்ணா இருவருமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களைச் சமூகக் கேடுகளாக நினைத்தனர். அதனாலேயே தாக்கினார்கள். “நிறுவனமய மாக்கப்பட்ட மதத்தை நான் வெறுக்கிறேன்" என்பதைப் பல இடங்களில் பேசியிருக்கிறார் அண்ணா. பெரியார் கடவுள் மறுப்பைத் தூக்கிப் பிடித்தது வைதீக எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்புக்காகத்தானே தவிர, ஆன்மிக எதிர்ப்பு என அதைப் பார்க்க முடியாது. பிள்ளையார் சிலையைத் தான் பெரியார் உடைத்தார். சுடலைமாடன் சிலையை அல்ல.


நாட்டு தெய்வங்களை மக்களின் தெய்வங்களாகப் பார்க்கிறேன். இந்த ஆன்மிகம் மக்களுடைய ஆன்மிகம் அதாவது. இது நிறுவனமயமாக்கப்பட்டது கிடையாது. அதிகாரச் சார்பற்ற ஆன்மிகம் இன்றைக்கும் கிராம தெய்வங்களுக்கான திருவிழாவில் மத எல்லைக்கு அப்பாற்பட்ட கூடுகை, பங்கேற்பைப் பார்க்க முடியும். கடவுளுக்கும் மக்களுக்கும் குறுக்கே யாரும் இல்லாமல் வழிபட முடியும். கிராம எல்லையில் நிற்கிற வீரனை நீங்கள் தொட்டுக் கும்பிடலாம். படையல் போடும்போது குடும்பப் பெரியவர்தான் பல இடங்களில் பூஜைசெய்கிறார். இந்த ஜனநாயகம் நிறுவனமயமாக்கப்பட்ட பெருந் தெய்வ வழிபாட்டில் கிடையாது. அது நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு ஆளை நிறுத்துகிறது; சம்பிரதாயங்களை நிறுத்துகிறது. இதன் மூலம் கிடைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும் அதன்வழியாகக் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தையும் கொண்டே பிராமணியம் வாழ்கிறது. எப்போது வரை மேல், கீழ் என்ற அடுக்குமுறை இருக்கிறதோ அப்போது வரை அதற்கு எதிரான கலகங்களும் நீடிக்கத்தான் செய்யும். நான் என்ன சாப்பிடுகிறேனோ, அதை என் தெய்வம் சாப்பிடுகிறது. நான் கறி சாப்பிட்டால் என் தெய்வமும் கறி சாப்பிடும். நான் மது குடித்தால் அதுவும் மது குடிக்கும். இதுவும்கூட ஒரு உயர்தர சமத்துவம்தானே? அப்படிப்பட்ட மக்களின் தெய்வத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும்?   என அழுத்த திருத்தமாக சொல்கிறார் (மாபெரும் தமிழ் கனவு நூலில் இருந்து)


மக்கள் வசதிவாய்ப்பு அற்றவர்களாக இருந்தால், அவர்களின் குடிச்சாமியும் அப்படியே வறுமையில் இருக்கும். சாஸ்தாவின் குடிகள் இப்போது கொஞ்சம் வசதிபெற்றுவிட்டார்கள் போலும். கோபுரம் கட்டிக் கும்பாபிஷேகமே நடத்திவிட்டார்கள். எங்கள் பாட்டனார் காலத்தில் சாஸ்தாவின் மீது உப்புவாசமும் மீன் வீச்சமும் அடிக்கும்; இப்போது சந்தனமும் ஜவ்வாதும் மணக்கிறது. கடல் மணற்பரப்பில் கூரைக் கூட இல்லாமல், மக்களோடு சேர்ந்து வெயிலில் காய்ந்திருந்தவருக்குக் கருவறை வந்துவிட்டது. திருநெல்வேலி வட்டார மொழியில் பாட்டும் கதையுமாகக் கலந்திருந்த சாஸ்தாவின் வீரமும் ஈரமும் இப்போது சமஸ்கிருத மையமாகிவிட்டது. மக்களின் தெய்வங்கள், இப்படியே மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விடுமோ என்ற வருத்தம்தான் மனதை அரிக்கிறது என்ற தன் வருத்தங்களை இந்த புத்தகத்தின் வாயிலாக பதிவு செய்கிறார் தொ. ப.


காவியாடை என்றலே தற்போது இந்து மத அடையாளமாக போற்றப்படுகிறது.ஆனால் உண்மையில் அது  பௌத்தர்களு க்கு உரியதாகும். "சீவரத்தர்" என்ற சொல் செவ்வாடையணிந்த பௌத்தத் துறவிகளைக் குறிக்கும் சொல்லாகும். மொட்டை போடும்  வழக்கும் பௌத்தர்களிடம் இருந்தே பெறப்பட்டது .  இவ்வழக்கம் இந்து மத சாஸ்திரங்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை



தமிழ்நாட்டுப் பக்தி இயக்கம் என்பது சைவ, வைணவ மதங்களின் எழுச்சி மட்டுமன்று. அது சமண, பௌத்த மதங்களுக்கு எதிரான கலகக்குரலும் ஆகும். இதன் விளைவாகப் பௌத்தம் தமிழ்நாட்டில் வேரற்றுப் போயின.சமணமும் பௌத்தமும் வெறுத்தற்குரிய மதங்களாகச் சைவ வைணவர்களால் கருதப் பட்டன. இந்த வெறுப்புணர்வின் எச்சங்கள் தமிழரிடையே இன்னும் வசைச் சொற்களாக வழங்கிவருகின்றன.


வயதிற் பெரியவர்களின் நிர்வாணம் கேலிக்குரியதாக ஆக்கப்பட்டது, திகம்பர சமணத் துறவிகளின் மீதான எதிர்ப்புணர்வில்தான். அம்மணம், மயிராண்டி, மயிரைப் பிடுங்கு என்பன போன்ற வசைச் சொற்கள் இன்னும் வழக்கத்திலுள்ளன. நிர்வாணமாக இருத்தல், உடம்பில் மயிரின்றி இருத்தல், உடம்பின் மயிர்க்கால்களைக் கத்தி கொண்டு மழித்துக்கொள்ளாமல் கையினாற் பிடுங்கும் லோசனம் என்னும் வழக்கத்தைக் கடைப்பிடித்தல் ஆகியனவே மேற்குறித்த வசைச் சொற்கள் பிறக்கக் காரணங்களாகும். நிலையற்றவன், உறுதியற்றவன், ஒற்றைப்போக்கு இல்லாதவன் என ஒருவனைக் குறைகூறும்போது 'ஏழுவழி போகிறவன்' என்பது வசை மரபு ஆகும். இது சமண சித்தாந்தத்தில் பேசப்படும் சப்த பங்கி என்னும் ஏழு நிலைகளைக் குறித்ததாகும். சமணமதம் தனியொரு இறைவனை ஏற்றுக் கொள்ளாததாகும். உண்டு, இல்லை, சொல்ல முடியாதது என்ற மூன்றையும் மாறி மாறிக் கூட்டி ஏழு நிலைகளைச் சமணத் தத்துவம் பேசும். அதையே வெற்றி பெற்ற சைவம் வசைச் சொல்லாக நிறுவிக் காட்டியுள்ளது.


கிரியா அகராதியை இந்த புத்தகத்தில் வெளுத்து வாங்குகிறார் தொ. ப. ‘மாறு’ என்ற தமிழ்ச்சொல் பெருக்கு, கூட்டு, விளக்கு என்ற முன் ஒட்டுகளோடு வரும் சொல்லாகும். தென்மாவட்டங்களில் இதற்கு வாரியல் என்றும் பெயர். (ஈர்க்குப்) புல்மாறு, தென்னை) ஈர்க்குமாறு, கொளுஞ்சிமாறு, பனங்கொளுஞ்சிமாறு, குறத்திமாறு, (மூங்கில்) குச்சிமாறு என்பன,பலவகைப்பட்ட உற்பத்திப் பொருள்களாகும். இவை அனைத்தையும் மறைத்துவிட்டு நகர்ப்புறத்தில் ஒரு சிறுதொகையினர் மட்டும் பயன்படுத்தும் 'துடைப்பம்', என்னும் சொல் மட்டும் அகராதியில் முன் நிறுத்தப்பட்டு உள்ளது. உண்மையில் எந்த வகை மாறும் துடைக்கின்ற பணியைச் செய்வது இல்லை; அவை பெருக்கும், கூட்டும், விளக்கும். துணியைப் போலத் துடைக்காது. இவையெல்லாம் அகராதித் தயாரிப்புக் குழுவினருக்குத் தெரியாதா, தெரியும். இது Neo Brahminismத்தின் முகங்களில் ஒன்று.



இதுமட்டுமல்ல; மரபுவழி உறவுமுறைச் சொற்கள், தொழில சார்ந்த சொற்கள், நாட்டார் விஞ்ஞானம் சார்ந்த சொற்கள் ஏட்டிலும் இடம்பெற்ற பழமொழிகள் காட்டும் சொற்கள் ஆகியவை மொத்தமாகவே காணாமல் போயிருக்கின்றன. அகராதியில் 'ஆரியம்' உண்டு; 'ஆரியக்கூத்து' காணோம். அதுதான் அகராதியே இருக்கிறதென்று விட்டுவிட்டார்கள் போலும்!


இது போல வழக்கமான தொ. பவின் புத்தகத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும் புத்தகம் இது . திருக்குறள் பற்றிய கட்டுரை  முக்கியமான ஒன்று.



மக்கள் வாழ்விலிருந்தும் வாக்கிலிருந்தும் பெறப்படும் செய்திகளால் ஆக்கப்படும் வரலாறு மட்டுமே சனநாயகத்தன்மை உடையதாக அமைந்திருக்கின்றது.


✍️கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு