பதின் - எஸ்.ராமகிருஷ்ணன்
வாசிப்பு 31
பேருந்து பெயர்: பதின்
ஓட்டுனர்: எஸ்.ராமகிருஷ்ணன்
புறப்படும் இடம் : நிகழ் காலம்
போகும் இடம் : கடந்த கால பால்ய பருவம்
பயணச்சீட்டு விலை : ₹ 275
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே! " என்று நாம் மனம் தறியை பின்நோக்கி இயக்கி நம் பால்ய கால நினைவுகளை நெய்து விடுகிறது. அதில் தான் எத்தனை வண்ணங்கள்! எத்தனை வடிவங்கள்!
வாகன நெரிச்சலிலும், அலுவலக எரிச்சலிலும் பாதுகாத்து வைத்து இருக்கும் அவள் அறியாமல் உதிர்ந்து, யார்க்கும் தெரியாமல் நாம் கவர்ந்து வந்த முதல் காதலியின் கரு கூந்தல் சிறு பூவை மீண்டும் உயிர்ப்பித்து நம்முள் மலர செய்கிறது இந்த பதின்.
ஐந்து முதல் பதினைந்து வயது வரையில் உள்ள பால்ய பருவம் மிக அற்புதமானது. இந்த வயதில் தான் அதீத கற்பனைகள், மகிழ்ச்சிகள், துயரங்கள், பயங்கள், ஆசைகள், கோபங்கள் அவமானங்கள்,
ஏமாற்றங்கள், திருட்டுதனங்கள், தோழமைகள், துரோகங்கள், கனவுகள் மற்றும் பிரிவுகள் போன்றவை நமக்கு நமது வாழ்க்கையின் ஆசானாக அமையும். இவ்வாறு நாம் கடந்து வந்த பாதையை உள் சென்று நந்து மற்றும் சங்கரின் பார்வைகளின் வழியாக நமக்கு நம்மையே வேடிக்கை காட்டுகிறது இந்த நாவல் என்ற கட்டுரை அல்லது கட்டுரை போன்ற நாவல்.
சங்கர் சொல்லும் பொய்யும் ,செய்யும் விசித்திர செயலும் அதை நம்பி பின்பற்றும் நந்துவும் இந்த நாவலின் நாயகர்கள். சங்கர் வித்தியாசமான சிந்தனைகள் நம்மை ஈர்க்கும். நந்துவின் அப்பவித்தனம் நம்மை மயக்கும்.
நந்துவுக்கு விளங்காத பல விஷயங்களையும் அவனுக்குக் கற்றுத்தரவே அவனுடைய நண்பன் சங்கர் இருக்கிறான். நந்துவும் உறங்கும் நேரம் தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும் சங்கரின் நிழலாகவே செல்கிறான். இவ்விருவரின் தேடல்களாலேயே நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஊரிலே மிகப்பெரிய பேக்கரியது. பின்மதிய நேரம் அதன் முன்பாக நந்துவை கூட்டிக்கொண்டு போய் நின்றான் சங்கர். "பன் வாங்கப் போகிறாயா?" என்று கேட்டான் நந்து
“இல்லை, கொஞ்சநேரம் சும்மா நில்லு தெரியும்" என்றான். கண்ணாடி பாட்டிலுக்குள் விதவிதமான பிஸ்கட்டுகள் இருந்தன. ஒரு பக்கம் பிளம் கேக்குகள், ரொட்டிகள், சூஸ் பொரி, மக்ரோன், ரோல் கேக்குகள், குருவி பிஸ்கட், ரஸ்க், பெரிய பர்த்டே கேக் என பேக்கரியைப் பார்க்கப் பார்க்க நாவில் எச்சில் ஊறியது.
கொஞ்ச நேரத்தில் பேக்கரியிலிருந்து பன்ரொட்டி சுடும் வாசம் கசிந்து வரத்துவங்கியது.
"நல்லா வாசனையை இழுத்து உறிஞ்சிக்கோ" என்றான் சங்கர். அவன் சொன்னது போலவே பன்ரொட்டியின் வாசனையை உடலுக்குள் நிரப்பினான் நந்து. அடுப்பு சூடு அதிகமாகிறது போலும்; பன்ரொட்டியின் மணம் அதிகமாகியது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாசத்தை நிரப்பிக் கொண்டான். அடுத்த ஐந்து நிமிடங்களில் பழரொட்டி சுடும் வாசனை. ஆஹா, எவ்வளவு நறுமணம்..! இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அந்த வாசனையை இழுத்து கொண்டார்கள்
பத்து பன்ரொட்டிகளையும் பழரொட்டிகளையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடித்தது போல, சங்கர் வயிற்றைத் தடவியபடியே சொன்னான்.
"வயிறு நிரம்பிருச்சி.''
"எனக்கும்தான்" என்று வயிற்றைக் காட்டினான் நந்து.
"நாம ரெண்டு பேரும் பிடிச்சது போகப் பன்னுல மிச்ச வாசனையே இருக்காது. கடையில பன்னு வாங்குற ஒருத்தனும் அதை மோந்து பாக்கவே மாட்டான். திங்குறதுலே குறியா இருப்பாங்க" என்றான் சங்கர்.
இப்படி முதற்திருட்டு, பள்ளியின் முதல்நாள், பகலை அளப்பது, கூடிக்கலைவது, எனத் தனித்தனித் தலைப்புகளில் விருப்பம் போல கதை செல்லும் முறை, வாசகரை வித்தியாசமான கடந்தகால அனுபவத்திற்குள் அழைத்து செல்கிறது.
நவீன வாழ்க்கையில் நம்முடைய குழந்தைகள் இழந்துவிட்ட ஒவ்வொரு கணத்தையும் எஸ்.ராமகிருஷ்ணன் ‘பதின்’ நாவலில் மீட்டுத் தருகிறார். காட்சி ஊடகங்களால் ஒருபோதும் காட்ட இயலாத கணங்கள் அவை.
✍️ கோடி

Super 🦋
ReplyDelete🙏🏼🙏🏼
ReplyDelete