சமயங்களின் அரசியல் - தொ. பரமசிவன்
வாசிப்பு 26
சமயங்களின் அரசியல் - தொ. பரமசிவன்
எந்த மதம் உண்மையான மதம் என்ற அடிப்படையில் கடவுளைப் பற்றி என் தேடலின் ஆரம்பக்கட்ட முடிவில் ஒரு குறிப்பிட்ட மதம் தான் உண்மையான மதம் என்று உறுதிச் செய்து, அதை நோக்கி நான் செல்லும் போது என்னை பிடித்து மக்களின் தெய்வங்களின் பக்கம் திருப்பி தமிழனுக்கு மதமே இல்லை என உணர்த்தியவர் ஐயா தொ. ப அவர்கள் . அதற்க்கு காரணமாக அமைந்த பத்மஸ்ரீ திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு எனது கோடி நன்றிகள்.
பதியப்பட்ட வரலாறுகளையும், அதன் அரசியலையும் ஆராய்ந்து பதிவு செய்வது என்பது கொஞ்சம் சுலபமான வேலை தான். ஆனால் எங்கேயும் பெரிதாக பதிவு செய்யப்படாத மக்களோடு அன்றாட வாழ்க்கையில் கலந்து போய் விட்ட பண்பாடுகளை தனியாகப் பிரித்து எடுத்து ஆராய்ந்து அந்த பண்பாட்டுக்குள் ஊடுருவி அதை தன்வசம் ஆக்கி கொண்ட அல்லது ஆக்க முயற்சிக்கும் சமயங்களின் அரசியலை ஐயா தொ.பரமசிவனை போல ஆதரங்களோடு பதிவு செய்து சொல்லுவது என்பது மிக மிக கடிமான காரியம் அதுக்கென்று தனியான துணிச்சல் வேண்டும். இனி எத்தனை பேர் பிறந்து வந்தாலும் இவரின் இடத்தை நிரப்பவது அரிதிலும் அரிது
இந்த புத்தகத்தை படித்து முடித்து வெகு நாள்கள் ஆகியும் என்னால் புத்தகத்தை விவரிக்க முடியவில்லை. தாயின் கருவில் இருந்து வெளியே வரும்போது பாதியில் சிக்கி கொண்ட குழந்தையை போல சிக்கிக்கொண்டு வேதனைப்பட்டது என் சிந்தனை. இதுவரை நான் படித்த புத்தகளில் எதாவது சில புதிய தகவல்கள் கிடைக்கும் ஆனால் இந்த புத்தகத்தில் அச்சிடப்பட்ட ஒவ்வொரு எழுத்துகளுமே புதிய தகவல்களைக் கொண்டு உள்ளது. எதை குறிப்பது, எதை விடுப்பது என்பதே என்னளவில் பெரும் மனப்போராட்டமாக வெடித்தது.
நாம் அனைவரும் சிவன் வழிபாடு என்றால் அது சைவம் மதமே என்று நினைத்து கொண்டு இருக்கும் வேளையில் அதில் பாசுபதம், காபாலிகம், காளாமுகம், மாவீரத்தி என்று நான்கு பிரிவிகள் இருந்ததாகவும். இப்பொழுது இருக்கும் சைவ சித்தாந்தம் காசுமீரத்தில் " ஸ்ரீகண்டர் என்பவரால் ஹரப்பா நாகரிங்கத்தில் காணப்பெறும் "பசுபதி" வழிபாட்டில் இருந்து தோற்றிவிக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்.மேலும் மேல கூறப்பட்ட நான்கு பிரிவுகளில் மூன்று பிரிவுகளின் எதுவுமே தமிழ் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வைணவக் கோயில்களின் கருவறையில் பூசனைச் செய்வோரில் ஒரு பிரிவினர், தங்களை 'வைகானசர்' எனக் கூறிக்கொண்டனர். அதாவது, தங்களை 'விகானஸ்' என்னும் முனிவர் (ரிஷி) மரபில் வந்தவர்கள் என்றும், தாங்கள் திருமாலைத் (விஷ்ணுவை) தவிர, வேறு கோலங்களைப் (மூர்த்தங்களை திருமேனிகளை) பூசனை செய்யமாட்டோம் என்றும் வாதிட்டனர். இதன் உண்மையான பொருள் என்னவென்றால் 'ஆழ்வார்கள்' என்ற பெயரில்"கோயிலுக்கு உள்ளாக திருநிலைப்படுத்தப்பட்ட சந்நிதிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்பதே ஆகும். பல்வேறு சாதிகளிலும் மனிதராகப் பிறந்து, திருமாலைப் பாடிப் புனிதராக மாறிய ஆழ்வார்களை சாதி மேலாண்மை உணர்வுடன் போற்ற மறுத்தது 'வைகானசம்' ஆகும் இவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆழ்வார்களைக் 'கொண்டாடிய' மறுதரப்பினர் தங்களை 'பாஞ்சராத்ரிகள்' எ அழைத்துக்கொண்டனர். இந்த முரண் இன்றுவரை மண உறவுகளிலும் நிலைத்து நிற்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும் வைகானசம் முனிவர் வழிப்பட்டது, பாஞ்சராத்திரம் வேத வழிப்பட்டது என்பதே வைணவர்களின் நம்பிக்கையாகும். பாஞ்சராத்திர ஆகமங்களை இறைவனே ஐந்து இரவுகளில் வெளிப்படுத்தி அருளினான் என்பது பாஞ்சராத்திரிகளின் நம்பிக்கையாகும்
12 ஆழ்வார்களின் பாசுரங்களிலும் கீதையை பற்றிய குறிப்பு "மாயன் அன்று ஓதிய வாக்கு" என திருமழிசை ஆழ்வாரின் ஒரே ஒரு பாசுரத்தில் மட்டுமே வருகின்றது என்பது நிகழ்கால இந்துக்களுக்கு அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்
நான் ஒவ்வொரு முறையும் மதங்களை பற்றி எழுதும் போது அதற்கு எதிராக பலரும் சொல்லுவது சித்தர்களின் பாடல்களை படி அப்போ தான் உனக்கு புத்தி வரும் என்பதே ஆனால் உண்மையில் சித்தர்கள் அவர்களின் கோவில் மற்றும் வழிபட்டு நம்பிக்கைக்கு எதிராக இருந்து உள்ளார்கள். இது அவர்களுக்கு எப்படி என் வாயால் சொல்லுவேன் அதனால் தொ.ப அவர்களின் பதிவுகளை எடுத்து உரைக்கிறேன்.
தமிழ்நாட்டில் சித்தர் இயக்கம் மூன்று நிலைகளில் கால் கொண்டது. வேத எதிர்ப்பு, புலால் உணவு எதிர்ப்பு, கோயில் எதிர்ப்பு என்பவையே அந்த மூன்றுமாகும்.
சாத்திரங்கள் ஒதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்து இரைப்பு வந்தபோது
வேதம் வந்து உதவுமோ” (19) மீனிறைச்சி தின்றதில்லை அன்றும் மின்றும் வேதியர்
மீனருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்" (157)
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா" (சிவவாக்கியர்.34) என்பன போன்ற சித்தர் பாடல்களே இதற்கு உதாரணங்களாகும். அந்தக் காலப்பகுதியில் நிலைபெற்றுவிட்ட அதிகார நிறுவனங்களாக வேதம், பார்ப்பனர், கோயில் ஆகியவற்றை எதிர்த்தே சித்தர் மரபினர் கலகம் செய்யத் தொடங்கினர். சித்தர்களில் பெரும்பாலோர் எளிய மக்களின் மருத்துவர்களாக விளங்கியிருக்கின்றனர். இதுவே சித்தர் மரபின் பரவலுக்கும், செல்வாக்கிற்கும் காரணமாயிற்று. சாதி அடுக்கு முறையினை (அந்தக் காலத்தில் தத்துவார்த்த ரீதியிலாவது) இராமானுசருக்குப் பின்னர் வந்த வைணவம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. எனவே சித்தர்களின் கலக மரபு சைவத்திற்கு உள்ளிருந்தே தொடங்கியது சோழப் பேரரசு சைவத்தையே தன்னுடைய அரசமதமாகக் கொண்டிருந்தது. எனவே அரசதிகார எதிர்ப்பு என்பது சித்தர்களின் மரபில் சைவத்திற்கு உள்ளிருந்தே தோன்றியது. இது தவிர்க்க இயலாத ஒரு முரண்பாடாகும்.
சித்தர்கள் அலைந்து திரிபவர்கள். கடவுளை நம்புகிறவர்கள். ஆனால், கோயிலை நம்பாதவர்கள். பார்ப்பன மேலாண்மையை விரும்பாதவர்கள் சாதிவேற்றுமை கருதாதவர்கள். மேற்கண்ட காரணங்களால்தான் சித்தர்களின் நூல்கள் எதுவும் மடத்திலிருந்து கிடைக்கவில்லை இதுவரை கிடைக்கப்பெற்ற சித்தர் நூல்கள் யாவும் கிராமத்து ஏடுகளிலிருந்தும் மனப்பாடம் வழியாகவும் கிடைத்தவை. இந்த சித்தர் மரபை உள்வாங்கி தான் இசுலாமிய சூபி பிரிவு உருவானது என்பது நான் எதிர்பாராத புதிய தகவல்
சம்பந்தரை அப்பர் சந்தித்தார். அவருடைய பல்லக்கை அப்பர் தூக்கினார். 'அப்பரே' என்று அப்பரைச் சம்பந்தர் அழைத்தார் என்று கூறுவதெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட கதை சுருக்கமாகச் சொல்வதானால் சம்பந்தருக்கு வேள்வியும், வேதமும் முக்கியம் அப்பருக்குச் சிவன் மட்டுமே முக்கியம்
மேலும் விஜயநகர பேரரசின் வருகையால் தமிழகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்,உலகளந்த நம்பியின் கதை,அம்பிகா இயக்கியின் கதைக்கும் காரைக்கால் அம்மையாரின் கதைக்கும் உள்ள தொடர்பு,கோலம் இடுவதின் உண்மையான காரணம், வடநாட்டில் உள்ள கார்த்திகேயன் வழிபாடு போன்ற எண்ணிக்கையில் அடங்காத தகவல்களால் நிரப்பப்பட்ட மிக அற்புதமான புத்தகம் இந்த சமயங்களின் அரசியல்.
✍️கோடி

Comments
Post a Comment