பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி


வாசிப்பு 25

 பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி 




 இந்த நாவலை வாசித்து உள்ளீர்களா ?


இல்லைங்களே!


என்னது இல்லையா நீ எல்லாம் ஒரு புத்தகம் வாசிப்பாளனு வெளியே சொல்லிறாதே


இப்படி என்னை ஏதோ கொலைக்  குற்றம் செய்தவனைப்  போல விசாரணை செய்யும் அளவுக்கு அப்படி என்ன நாவலுங்க அது எனக்  கேட்டால் ஒரே குரலில் ஒலிக்கும் பெயர் பொன்னியின் செல்வன். இந்த நாவலைப்  பல முறை வாங்க நினைத்தும்  வாசிக்க முடியாமல் போய்விட்ட நிலையில் நான் எதிர்ப்பாராத தருணத்தில் ஒரு நட்பு கரம் இந்தப்  பொக்கிஷத்தை எனக்கு பரிசளித்தது .என் இடுக்கன் களைந்த தருணம் அது ஆனால் இந்த நாவலை பல இடையுற்கு இடையில் வாசித்து முடித்து  மதிப்புரை எழுதும் இந்த நேரத்தில் அந்த நட்பு கரம் விலகிவிட்டது என்று நினைக்கும் போது  தரையில் விழுந்த மீன் போல உணர்கிறேன் அந்த இணையற்ற நட்புக்கு என் நன்றிகள். சரி நாவலுக்கு போவோமா


 தீவிர வாசிப்பாளர்களுக்கும். மற்றும் வாசிப்புப் பழக்கமே இல்லாத பொது மக்களுக்கும் இடையில் கடந்த ஐம்பது வருடங்களாக  நாற்காலி போட்டு அமர்ந்து இருக்கும் ஒரே நாவல் என்றால் அது பொன்னியின் செல்வனை தவிர  வேறு எதுவும் இருக்க முடியாது அந்த அளவுக்கு விறுவிறுப்பாக  நம் கண்களை புத்தகத்தை விட்டு நகுத்த விடமால் ஒரு மந்திரக்  கட்டை போட்டு இருப்பார் ஆசிரியர்  அமரர் கல்கி அவர்கள். மூன்றரை வருட காலம் இது தொடராக வந்து முடிந்தவுடன் .ஏன் இவ்ளோ சீக்கிரம் முடித்து விட்டிர்கள் இன்னும் தொடருங்கள் என்று கேட்டு பல கடிதங்கள் வந்தது என்றால் அந்த மந்திர கட்டின் வீரியத்தை என்னவென்று சொல்ல?


ஒரு ரகசியத்தை மர்மமாக கொண்டு போவதும் அந்த ரகசியத்தின் முடிச்சுகளை அவிழ்க்கும் விதமும் முதல் பாகத்தில் இருந்து கடைசி பாகம் வரை புதிரை கண்டுப்பிடிக்கும் போட்டியில் கலந்து கொண்ட உணர்வு. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்ற புகழ் பெற்றக் கேள்விக்கு முன்னோடி ஆதித்த கரிகாலனை யார் கொன்றார்கள் என்பது


இதில் கதாநாயகன் யார் வந்தியதேவனா? அல்லது அருள்மொழியா? என்ற குழப்பம் எனக்கு படிக்க படிக்க ஏற்பட்டு கொண்டே இருந்தது.கதையின் ஆரம்பத்தையும் முடிவையும் வைத்தே   வந்தியதேவன் தான் கதாநாயகன் என்ற  முடிவுக்கு வர வேண்டி உள்ளது . ஒவ்வொரு கதாபத்திரத்தையும் சிறப்பாக செதுக்கி உள்ளார் அமரர் கல்கி அவர்கள். அதுவும் நந்தினியின் கதாபாத்திர அமைப்பு பல மனநிலைக்கு என்னை கொண்டு சென்றது சில சமயம் ஐயோ பாவம் , சில சமயம் அடிப்பாவி. அருள்மொழியை ஆட்சிக்கு உகந்தவனாக காட்ட ஆதித்தகரிகாலனை குழப்பவாதியாக காட்டி இருக்க தேவையில்லை .அதன் பிறகு நான் வியந்த பாத்திரம் பூங்குழலி  இப்படி ஒரு தைரியமும்,  துள்ளலும் உடைய பெண்ணை யாரு தான் விரும்ப மாட்டார்கள். குந்தவை கதாப்பாத்திரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். கடைசி தருணங்களில் பெரிய பழுவேட்டரையரூம் , மணிமேகலையும் என் கண்களை ஈரம் ஆக்கி விட்டார்கள்.


சம்பவங்கள் அடிக்கடி நிகழும் ஆனால் சகாப்தம் என்றோ ஒரு நாள் சம்பவிக்கும் . சம்பவங்கள் மறக்கும், சகாப்தம் வேரூன்றி நிலைக்கும். பொன்னியின் செல்வன் ஐம்பது வருட சகாப்தம். எம்.ஜி.ஆர் முதல் மணிரத்னம் வரை இதை படமாக எடுக்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். என்ன தான் பிரம்மாண்டமாக காட்சிப்  படுத்தினாலும் அது இந்த சமுத்திரத்தின் ஒரு துளிக்கு கூட ஈடாக முடியாது என்பது நிச்சயம்


தமிழகத்தில் தணியாத ஒரு வரலாற்று தாகத்தை ஏற்படுத்திய  கல்கி  அவர்கள் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வை மையமாக அமைத்து புதினத்தைப் படைத்துக் காட்டியதோடு அதில் கொலையின் பின்புலத்தில் செயல்பட்டவர்கள் என ஊகிக்கத் தக்கவர்களாக வரலாற்றுப் பாத்திரங்கள் சிலரையும், கற்பனைப் பாத்திரங்கள்  சிலரையும் உலவவிட்டு உண்மையான குற்றவாளி யார் என்பதை வாசகர்களே ஊகித்து அறிவார்களாக என்று தன் முடிவையும் கூறிச் சென்றுள்ளார்.


ஒரு வாசகனாக இதை கொண்டாடும் அதே வேளையில் ஒரு வரலாற்று விரும்பியாக இதை உடைக்கும் கடமையும் எனக்கு உண்டு. என்னப்பா நீ இது புனைவு நாவல் இதுலே போய் எதுக்கு தப்பு  சொல்லுறேன்னு நீங்க கேட்கலாம்  ஆனால் இங்கே சோழர்கள் பற்றி தெரிந்து கொள்ள புத்தகம் பரிந்துரைக்க சொன்னால் உடனே எல்லோரும் பொன்னியின் செல்வனை தான் சொல்லுகிறார்கள். இது புதிதாக வரலாறு படிக்க நினைப்பவர்களுக்கு தவறான  வழிக்காட்டுதல் ஆகும். 


அப்படி என்னப்பா இதில்  தப்பு இருக்கு என்று கேட்டால் என்னென்னவோ இருக்குகிறது அவற்றில் சில :


• சுந்தர சோழர் இறந்த பிறகு தான் மதுராந்தக உத்தம சோழர் அரியணை ஏறுகிறார் ஆனால் நாவலில்  சுந்தர சோழர் இருக்கும் போதே அரியணை ஏறுவது போல் காட்டி உள்ளார்கள் இது மிகப்  பெரிய வரலாற்றுப் பிழை


• மதுராந்தகனும் கரிகாலன் கொலைக்கு காரணம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவது உண்டு ஆனால் நாவலில் இரண்டு மதுராந்தகன் இருந்ததை போல காட்டி அவன் வேறு உத்தம சோழன் வேறு என்று சொல்லி இருப்பது மிக பெரிய வரலாற்று மோசடி திசை திருப்பும் வேலை



• சோழர்களின் குலதெய்வம் நிசும்பசூதனி என்பதே ஆகும் இதை ஆசிரியர் ஒரு தடவை கூட குறிப்பிடவில்லை பொத்தாம் பொதுவாக துர்க்கா பரமேஸ்வரி என்று சமஸ்கிருத வார்த்தையைப்  பயன்படுத்தி இருக்கிறார் . இதை நான் திட்டமிட்ட சூழ்ச்சியாகவே பார்க்கிறேன்.


ஒரு புனைவு என்பது நடந்த வரலாற்றுக்கு  புதியக்   காரணங்களையும், கதாபாத்திரகளையும் கொண்டு புதிய வடிவம் கொடுக்கலாமே தவிர, அந்த வரலாற்றையே  மாற்றக்  கூடாது.



இப்படி நிறைய தவறுகள் இருக்கிறது அதை எல்லாம் இங்கே நான் சொல்ல விரும்பவில்லை. வாசகர்களிடம் நான் வேண்டிகொள்வது ஒன்று தான் இந்த நாவலை புனைவாக மட்டும் பாருங்கள் வரலாறு ஆகக்  கருதி யாருக்கும் பரிந்துரைக்க வேண்டாம்..




✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு