நாகர்களின் இரகசியம் - அமிஷ் திரிபாதி
வாசிப்பு 21
நாகர்களின் இரகசியம் - அமிஷ் திரிபாதி.
சரியாக பத்து வருடங்களுக்கு முன் ஆர்வமே இல்லாமல் நான் படித்த அமிஷின் "மெலூஹாவின் அமரர்கள்" என்ற நாவலின் இரண்டாம் தொகுதிதான் இந்த நாகர்களின் ரகசியம். தலைப்புக்கு ஏற்றார்போல் முதல் தொகுதியில் இருந்த பல ரகசியங்களை இந்த தொகுதி உடைகிறது. அதேவேளையில் புதிய ரகசியங்களை உருவாக்கி மூன்றாம் தொகுதியை படிக்க கட்டாயப்படுத்துகிறது.
புராணத்தில் உள்ளவற்றை சொல்லாமல், அதில் உள்ள கதாபாத்திரங்களையும், இடங்களையும் மட்டும் எடுத்துக் கொண்டு.. ஒரு புதிய சிவபுராணத்தை உருவாக்க முயற்சி செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார் வடநாட்டு எழுத்தாளர் அமிஷ்.
அமிஷின் எழுத்து ஏதோ திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் ஒரு மாயையை நமக்குள் ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு காட்சிகளை தத்ரூபமாக எழுத்தில் வடித்துள்ளார். ஆரம்பத்தில் கண்களைச் சோர்ந்து போக வைத்தாலும், சிவா-பரசுராமன் சந்திப்பு மற்றும் சிங்கபுலியுடன், சதி நடத்தும் சண்டையிலிருந்து நம் கண்களை அகலமாக விரிக்க வைக்கிறது நாவல்.
முதல் தொகுதியில் சூரியவம்சிகளுடன் பயணித்த கதை, இரண்டாம் தொகுதியில் சந்திரவம்சிகளுடன் பயணிக்கிறது. நாகர்கள் என்றால் உடல் குறைபாடு உள்ளவர்கள் என்று சித்தரித்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஏனென்றால் நாகர்கள் என்றால் தமிழர்கள் (இதில் நான் முரண்படுகிறேன்) என்ற பொதுநம்பிக்கை தமிழ்நாட்டில் இருக்கிறது.
சதிக்கும் நாகர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன, தன் உண்மையான எதிரியை சிவா கண்டுபிடித்தாரா.. தன் நண்பன் பிரகஸ்பதியை கொன்றவனை பலி வாங்கினாரா, அதற்கு வாசுதேவர்கள் சிவாவுக்கு உதவினார்களா போன்ற பல திருப்புமுனைகளோடு நாகர்களின் ரகசியத்தை நோக்கி.. நம்மை காசியில் இருந்து பஞ்சவடி வரை கை பிடித்து அழைத்துச் செல்லுகிறார் அமிஷ்.
குறிப்பு: முதல் தொகுதியை படிக்காமல், இரண்டாம் தொகுதியை தொட வேண்டாம். கதாபாத்திரங்கள் பற்றிய தெளிவு கிடைக்காது.
✍️ கோடி

வெகு சிறப்பு கோடி அசத்துறீங்க..
ReplyDelete🙏🏼🙏🏼
Delete