சித்தன் போக்கு ( பிரபஞ்சன்)


வாசிப்பு 20



சித்தன் போக்கு ( பிரபஞ்சன்)








"பிரபஞ்சன்" இந்தப் பெயர் எனக்கு சில வருடங்களுக்கு முன், பாண்டிச்சேரி பற்றி புதியதலைமுறை இதழில் வந்த தொடர் கட்டுரைகள் மூலம் அறிமுகம். பாண்டிச்சேரிக்கு இவ்வளவு பெரிய வரலாறு பின்புலம் உள்ளதா என, என்னை வியக்க வைத்த எழுத்து அது. பிறகு "தாழப் பறக்காத பரத்தையர் கொடி" என்னும் புத்தகம் அவரை நெருங்கிச் செல்ல வைத்தது . பவா வின் கதைசொல்லல் அவரை நேசிக்க தூண்டியது, அந்த தூண்டலினால் போகிற போக்கில் வாங்கியது இந்த "சித்தன் போக்கு".

ஒரு கதை நம்மை என்ன செய்யும்..?நெருப்பு தன்னோடு சேரும் அனைத்தையும் நெருப்பாக மாற்றுவதுப் போல தன்னை படிப்பவர்களை அதனுள்ளே இருக்கும் பாத்திரமாகவே மாற்றிவிடுகிறது கதை. எந்த ஒரு கதையும் தனித்துவமானது இல்லை. அது நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு நினைவின் சாயலை கொண்டுள்ளது. எதையும் நினைவுபடுத்தாத கதை எளிதில் முடிவடைந்து கண்ணுக்கு தெரியாமல் கரைந்து விடுகிறது.

காலம் இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ கதைகளை கருவிழியின் அளவைப் போல அதன் பிறப்பில் இருந்து மாற்றாமல் வைத்துக் கொண்டேயிருக்கிறது. அவ்வாறு என்றும் மரணம் இல்லாத சிரஞ்சீவியாக வாழும் "பிரபஞ்சனின்" கதைகளில் "பெருமாள்முருகன்" அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட இருபது கதைகளை கொண்ட தொகுப்பு இந்த புத்தகம்.

முதல் கதையான "பாதுகை", சப்பாத்துகளை(ஷுக்கள்) வைத்து சுதந்திரகால ஏற்றத்தாழ்வுகளை மிக நேர்த்தியாக சட்டத்திற்கு உட்பட்டு தோலுரிக்கும்.

"குமாரசாமியின் பகல் பொழுது" என்ற கதையில்  காலையில் அலுவலகம், இரவில் வீடு என்று  கூண்டுக்குள்  இருக்கும்  பறவையைப் போல வாழும் மனிதன் எதேச்சையாக,  தன் பகல் பொழுதில் வெளிஉலகை காண நேர்கையில், தோன்றும் நினைவுகளும், ஏற்படும் மாற்றங்களும்.. அனைவரின் வாழ்விலும் நிகழ வேண்டிய ஒன்று. இதில் சாவைப் பற்றி வரும் வரிகள் நமக்குள் நம் வாழ்வைப் பற்றி பல கேள்விகளைத் தோற்றுவிக்கும். "பிறந்தவர் சாவது இயற்கை. ஆனால் வாழ்ந்தவர் சாவது தானே நியாயம். வாழாதவர் சாவது என்ன நியாயம்?"

கதையை இப்படி முடித்து இருப்பார்..

"வழக்கத்துக்கு மாறாக மூன்று மணிக்கே வீட்டுக்கு வந்த கணவனை, அதிசயமாகப் பார்த்தாள் யசோதை. அவருக்கும் அவள் அதிசயமாகத் தோன்றினாள். தலைவாரிக் கொண்டிருந்தாள் போலும். ஒரு கையில் சீப்பு இருந்தது. ஒரு பக்கத்துக் கூந்தல் வாரப்பட்டு, மறுபக்கம் விரித்துப் போடப்பட்டுக் கிடந்தது. ஸ்நானம் செய்திருந்தாள் போலும். சந்தன சோப்பின் வாசனை படர்ந்து கொண்டிருந்தது.

"என்ன இவ்வளவு சீக்கிரம்"

"அடைக்கலசாமி செத்துப் போய்ட்டார்."

அவள் யோசித்துவிட்டுச் சொன்னாள்.

"யார்? நம்ம வீட்டுக்குக்கூட வந்திருக்கிறாரே, கிறிஸ்தவர்"

"அவர் தான்"

"நாளைக்கு ஆஃபீஸ் இருக்கா"

அவர் கைலியை முடிந்து கொண்டே சொன்னார்.

"அவங்களுக்கு இருக்கும்."

"அவங்களுக்குன்னா?"

"எனக்கில்லை"

"அப்படின்னா ?"

'நான் இனிமேல் ஆபீஸ் போகப் போறதில்லை."

அவர் பாத்ரூம் போய்விட்டு வந்து அவளைப் பார்த்துச் சொன்னார்.

"ஏன்னு அப்புறம் சொல்றேன் இந்தா?" என்றபடி இருநூறு ரூபாய்ப் பணத்தை அவளிடம் சேர்த்தார். அறைக்குச் சென்று மேசைக்கு முன் அமர்ந்து கம்பெனிக்கு ராஜினாமா கடிதம் எழுத முடித்தார். எல்லையில்லாத அமைதி அவரைச் சூழ்ந்தது."

இப்படி ஒவ்வொரு கதையிலும்  நம் உள்ளத்தில் பல இரசவாதங்களை செய்துகொண்டே போகிறது எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் "சித்தன் போக்கு".

✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு