துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்

வாசிப்பு 19

துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்




நான் இந்த புத்தகத்தைப் படித்து முடித்து ஐந்து நாட்களாகிறது. ஆனால், மதிப்பு சொல்ல முடியாத இப்படியொரு புத்தகத்திற்கு  மதிப்புரை எழுதுவது என்பது என்னளவில் மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு நாளில், ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரி காட்சி தந்து.. மழை பொழிந்தால் கண்ணிலிருந்து மாயமாகும் தூரத்து மலைசிகரம் போலவே வார்த்தைகளும் என்னுள் வந்துவந்து மறைந்தது. ஓடும் துவைப்பான்(washing machine) மீது சீட்டுக் கட்டுகளை அடுக்குவது போல என்னுள் ஏற்படும் ஆச்சரியங்கள் மீதும் நினைவுகள் மீதும் என் எழுத்தை கோர்க்க முயல்கிறேன்.

எண்ணிக்கையற்ற ஒற்றையடி பாதைகளை, ஒரு தேசிய நெடுஞ்சாலை மறைத்து விடுவதைப் போன்று, பிரம்மாண்டம் என்ற ஒற்றை நிகழ்வு  எத்தனையோ சிறு சிறு அழகியலை எளிமையாக மரணிக்கச் செய்துவிடுகிறது. திரையரங்கில் அடித்துப்பிடித்து டிக்கெட் வாங்கியது, பேருந்தில் துண்டைப் போட்டு ஜன்னலோரம் இருக்கை பிடித்தது, மரமேறி மாங்காய் பறித்தது, பம்புசெட்டு குளியல் இப்படி பரந்து விரிந்து இருந்த ஆடுகளத்தை கை விரல்களுக்குள் சுருக்கியது தொழிழ்நுட்ப பிரம்மாண்ட வளர்ச்சின் முதல் வெற்றி. நம் எதிர்கால  மனிதர்கள்  நம்மை விட சுகமாக இருப்பார்கள்.. ஆனால், நம்மை விட மகிழ்ச்சியாக இருப்பார்களா?  என்ற சந்தேகம் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது எனக்குள் ஏற்பட்டது.

எஸ்.ரா அவர்களை பற்றி நான் சொல்லுவதை விட நண்பர் Kmkarthi Kn இன் வார்த்தையில் சொல்லுவது தான் இங்கே சரியாக இருக்கும் "ஒண்ணு எழுதறதுக்காகவே எங்கயாவது அலைவார்.. இல்லைனா எங்கயாவது அலைஞ்சத எழுதுவார்". ஆனால், இந்த புத்தகத்தில் தான் அலைந்ததை மட்டும் எழுதாமல், அலைந்து வந்த பாதைகளில் கண்ட மனிதர்களை, பெற்ற நண்பர்களை, கிடைத்த அவமானங்களை, கண்ட அதிசயங்களை , காண முடியாத அருவருக்கத்தக்க காட்சிகளை என்று தன் ஒவ்வொரு கட்டுரைகளில் புதுப்புது நிகழ்வுகளை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

நான் எந்த புத்தகத்தைப் படித்தாலும் அதில் புதியதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அந்த வகையில் இந்த புத்தகத்தில் ஏராளமான தகவல்கள் நிரம்பி இருந்தன. குறிப்பிட்டு  சொல்லுவது என்றால்.. நைனிடால் நகரம், தஞ்சாவூர் அருகில் இருக்கும் நார்த்தேவன்குடிகாடு கிராமத்தில் நடக்கும் பிரகலாத சரித்திரம் கூத்து, மயில்ராவணன் பற்றி தேடி அலையும் நிகழ்வு, அங்கே சந்திக்கும் கலைஞர்கள் மற்றும் அவர்களில் நிலை, தன்னை கண்டதுண்டமாக வெட்டுவேன் என்ற வாசகருடன் எஸ்.ரா வின் சந்திப்பு , முக்கியமாக நான் வியந்தது வேட்டை என்று சொல்லப்படும் நூலகம் போன்ற பல்வேறு  புத்தகச் சேகரிப்புக் கூடங்களில் இருந்து  புத்தகளை திருடி கொண்டு வந்து கொடுக்கும் கலையைச் செய்யும் கலைஞர் சார்லஸை கண்டுதான். அவன் எஸ்.ரா வை அறையும் பகுதியை படித்தவுடன் எனக்கு "அன்பே சிவம்" படத்தில்  நிதானமாக கோவப்படும் கமல்ஹாசனை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஏழாவது கட்டுரையான "நதியிலொரு கூழாங்கல்" தன் தாயின் ஆசையை நிறைவேற்ற ரிஷிகேசத்துக்குக் கூட்டி வந்திருக்கும் ஒரு மகனுக்கும், தன்னை இங்கேயே விட்டு சென்றுவிடு என்று சொல்லும் ஒரு தாய்க்கும் நடக்கும் கண்ணீர் உரையாடல் கொண்ட பகுதி. ஒரு தாயின் ஆசைகளை பற்றி எஸ்.ரா ஒரு வரி எழுதி இருப்பார்..
"தாயின் ஆசைகள் வெளிப்படாதவை.
அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகுதான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போலத்தான் அம்மாவின் ஆசைகள் அவை வெளிப்படாமலே ஒளிந்து கிடக்கின்றன.."

இந்த வரிகளைப் படிக்கும் போது ஐந்து வருடத்துக்கு முன் என்னைத் தனிமைப்படுத்திச் சென்ற என் தாயின் உள்ளே நான் காணாமல் விட்ட   கூழாங்கற்கள் எவ்வளவு  இருந்தனவோ என்ற வேதனை, புத்தகத்தை தூக்கி எறிந்து விட்டு அரைமணி நேரம்  தலையணையை என் கண்ணீரில் நனைக்கச் செய்தது.

"புத்தகங்கள் வாசிப்பதற்கானவை மட்டுமல்ல, அவை உலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் சாலைகள்" என இந்த புத்தகத்தில் வரும் எஸ்.ராவின் வார்த்தையைப் போல இந்த புத்தகம் என் வாழ்க்கையை எதை நோக்கி செலுத்த வேண்டும் என்ற ஒரு தெளிவான முடிவை என்னை எடுக்க வைத்துள்ளது. இனி அதை நோக்கி நத்தையைப் போல தொடங்கி, யானையைப் போல தொடர்ந்து, விதையைப் போல முடியும் என் பயணத்தை தொடங்க ஆயத்தம் ஆகின்றேன். என் தலையெழுத்தின் ஆரம்ப எழுத்து இந்த துணையெழுத்து..!!

✍️ கோடி

Comments

  1. மிகவும் சரியானது ....எனது ஆரம்பகால வாசிப்புகள் ஆனந்தவிகடனில் எஸ்ராவின் எழுத்துக்களாக இருந்தன அதில் சிறப்பானது துணை எழுத்தில் வரும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் முறை மனதினை பரவசப்படுத்தும் எழுத்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு