மாண்புமிகு மருத்துவர்கள் (முகில்)

வாசிப்பு 17

மாண்புமிகு மருத்துவர்கள் (முகில்)

மருத்துவம் வணிக மயமாகி பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டது. "மருத்துவம் படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்" என ஒளிவாங்கியின் முன் உறுதிமொழி எடுத்த முதல்தர மாணவர்கள் சென்ற தடம் தெரியவில்லை. இவர்களுள் விதிவிலக்காய் திகழும் சில மருத்துவர்களை  நமக்கு அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் முகில்.

வருடம் சரியாக ஞாபகம் இல்லை. 1995(அ)96 ஆக இருக்கும். என் பத்து வயது வரை எனக்கு உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் போகும். மருத்துவமனையே வாழ்விடமாக இருந்த காலங்களும் உண்டு. அவ்வப்போது பக்கத்தில் இருக்கும் சிகிச்சையகத்திற்கு(clinic) சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வோம்.  அங்கு இருந்த மருத்துவர் ₹20 ,₹30 என்று கட்டணம் வாங்குவார். ஆனால், முதன்முறையாக தெரிந்தவர் அறிவுரையின் பேரில் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் என் அப்பா என்னை கூட்டி சென்றார். சிகிச்சை முடிந்த பிறகு கட்டணம் எவ்வளவு என அப்பா கேக்க அந்த மருத்துவர் சர்வ சாதாரணமாக ₹100 என்றார். என் வாழ்நாளில் அன்றைக்குதான் என் அப்பாவின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகளை கண்டேன். எப்பொழுதும் என் அப்பாவுடன் வெளியே சென்றால் எனக்கு பேல்பூரியும், வீட்டுக்கு பச்சை வாழைப்பழமும் வாங்குவார். ஆனால், அன்று என் அப்பா எந்த கவனமும் இல்லாமல், ஏதோ யோசித்தபடி சைக்கிளை மிதித்து கொண்டு வந்தார். பேல்பூரி கடையையும் அதன் அருகில் இருக்கும் வாழைப்பழ வண்டியையும் கடந்து..!

இது என் அப்பாவின் நிலைமை மட்டும் இல்லை. நடுத்தரவர்க்கத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் நிலைமையும் இதுதான். அவர்களுக்காவது மருத்துவர்கள் உள்ள இடத்தில் வாழ்க்கை அமைந்துள்ளது.  ஆனால், இந்த வசதிகளின் வாசனைகூட தெரியாமல் நோயுடன் போராடும் அடித்தட்டு மக்களும் இவ்வுலகில் நிறைய உண்டு. அவர்களின் துயரம் கண்டு, தன் வாழ்நாளை அவர்களுக்காக அர்ப்பணித்த  சூப்பர் ஹீரோக்களான மருத்துவர்களை பற்றி எழுத்தாளர் முகில் அவர்களின் ஆவணக் கட்டுரைகளின் தொகுப்புநூல் இது.

ஒவ்வொரு மருத்துவர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும், அவர்களின் தன்னலமற்ற சேவையும் நம்மை நமக்கே ஏதோ ஒரு வேற்று உலகவாசியைப் போல உணரவைக்கிறது. அவர்கள் நினைத்து இருந்தால், மருத்துவத்தை தொழிலாக நினைத்து பிரமாண்ட மருத்துவமனைகளின்  சொந்தக்காரர்களாக வசூல் சாதனை படைத்து இருக்க முடியும். ஆனால், மருத்துவம் என்பது தொழில் அல்ல.. அது அனைவருக்கும் தேவையான ஒரு சேவை என்று உணர்ந்து  மாண்புமிகு மருத்துவர்களாக உலக சாதனை படைத்து உள்ளார்கள். அதிலும் இந்த புத்தகத்தில் என்னை கவர்ந்த மருத்துவர் Dr. பேட்ச் ஆடம்ஸ், "மனம் மகிழ்ச்சியாக இருந்தால் உடலில் நோயே வராது" என்று அறிந்து  தன்னைத் தானே கோமாளியாக மாற்றிக் கொண்டு மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்து இன்சூரன்ஸ் கூட தேவை இல்லையென ஒரு இலவச மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட மகத்தான புத்தகத்தை குறை சொல்ல முடியாது.. குறை சொல்லவும் கூடாது.. இருப்பினும் ஒரு வாசகனாக என் வருத்தத்தை தெரிவிக்க வேண்டியது என் கடமை. இந்த புத்தகத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல மருத்துவர்களை நமக்கு அறிமுகம் செய்கிறார் முகில். முக்கியமாக, கேரளா மற்றும் கர்நாடகா கூட இதில் அடங்கும். ஆனால், சென்னையைச் சேர்ந்த 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் கோவையைச் சேர்ந்த 20 ரூபாய் டாக்டர் டாக்டர் பால சுப்பிரமணியம் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒருவர் கூட  இத்தொகுப்பில் இல்லை. ஒருவேளை அனைவருக்கும் தெரிந்தவர்கள் என்றுகூட நினைத்து விட்டு இருக்கலாம். சத்தியமாக சொல்லுகிறேன், கோவையைச் சேர்ந்த எனக்கு, 20 ரூபாய் டாக்டர் என்று ஒருவர் இருந்தார் என்பதே அவர் இறந்து செய்தியாக வரும்வரை தெரியாது. அடுத்த பாகத்தில் எதிர்பார்க்கலாம் இருப்பினும் தமிழனுக்கு இதில்கூட  முதலிடம் இல்லையே என்றபோது கொஞ்சம் மனது வலிக்கிறது.

இந்த புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 80. இவர்கள் இருவருக்கும் ஆளுக்கு பத்து பக்கங்களை கொடுத்து இருந்தால் கூட 100 பக்கங்களாய் புத்தகம் முழுமை பெற்று இருக்கும்.


✍️கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு