கண்ணீரும் புன்னகையும் (முகில்)

வாசிப்பு 16

கண்ணீரும் புன்னகையும் (முகில்)


"மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற அடிப்படையில் இந்த உலகம் பல மாறுதல்களை கண்டுள்ளது. ஆனால், அந்த மாறுதலுடனே போட்டி போடும் அளவுக்கு மனிதர்களின் சில எண்ணங்கள் மாறாமல் அன்றும்..இன்றும்.. என்றும்.. பாடம் செய்த மம்மி போல அப்படியே இருக்கின்றது. அவற்றில் முக்கியமானது.. ஒரு மனிதன் உண்மையானவனாக, எதையும் வெளிப்படையாக யார் என்னவென்று பாராமல் பேசுபவனாக, எந்தவொரு கசப்பான அனுபவங்களுக்கும் தன் புன்னகையை மட்டுமே பதிலாக தருபவனாக இருந்தால்.. "திமிர்ப்பிடித்தவன், கெட்டவன்" என்று முத்திரை குத்தி அவனிடம் இருக்கும் சிறு கெட்ட பழக்கத்தைகூட பெரிதுபடுத்தி, ஒதுக்கி வைத்து விடுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு மாபெரும் கலைஞனின் உண்மை சரித்திரம்தான் "கண்ணீரும் புன்னகையும்".

இந்த புத்தகத்தை பல தருணங்களில் வாங்க நினைத்து, ஏதோ ஒரு காரணத்தினால் வாங்கவே முடியாமல் தள்ளிப்போனது. அதனால், கிண்டிலில்  இலவசமாக வந்த உடனே பதிவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன். எழுத்தாளர் முகில் அவர்களின் முதல் புத்தகம் என்பதால் கூடுதல் ஆர்வம் சேர்ந்துகொண்டது. முகில் அவர்கள் எந்த ஒரு சம்பவத்தை விவரிக்கும் போதும் வாசிபவர்களுக்கு ஒரு சிறு புன்னகையேனும் அரும்பும். ஆனால், இந்த புத்தகம் ஒரு மாபெரும் நகைச்சுவை மன்னனின் வரலாறு என்றபோதும் நமக்கு கண்ணீர் மட்டுமே சுரக்கிறது.

ஜே.பி.சந்திரபாபு.. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை. கிட்டத்தட்ட, இன்றைய கமல்ஹாசன் போல சினிமா உலகின் பல்கலைக்கழகம் போல வாழ்ந்தவர். ஆனால், அவரது கல்லம்கபடம் இல்லாத வெள்ளேந்தி குணத்தால் வறுமையின் அடி ஆழத்திற்கே சென்று இந்த உலகத்தை விட்டு மறைந்தார்.

மனதில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே, தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. ஒரு நல்லவனை பற்றிய கெட்ட புரளிகளையும், ஒரு சுயநலகாரனின் மேல் வரும் போலியான நல்ல பிம்பங்களையும் நம்பும் மக்கள் உள்ளவரை.. இங்கே மனிதமும், மனிதம் உள்ள கலைஞனும் மெல்ல சாவார்கள் என்பது சந்திரபாபு அவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லி தரும் ஞானம்.

ஒருவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், சந்திரபாபு போல ரொம்ப நல்லவனாக இருந்தால், ஏறிமிதித்து விட்டு போய் விடுவார்கள் கட்டிய மனைவி உள்பட.

ஜே.பி.சந்திரபாபுவின் வார்த்தைகளிலிருந்து :

என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

✍️ கோடி

Comments

Post a Comment

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு