மங்காதேவி - கோமகள் குமுதா
வாசிப்பு 13
மங்காதேவி - கோமகள் குமுதா
இந்த நாவலில் ஒவ்வொரு எழுத்துக்களும் ஒரு தேனியைப் போல பறந்து யாரும் அறியாத யாரும் தொடாமல் விட்டுச் சென்ற மலர்களை ஒன்று சேர்த்து என் கைகளில் மகரந்த வாசனையை தூவிச் செல்கின்றன. நாவல் தொடங்கும் இடத்துக்கும் முடியும் இடத்துக்கும் இடையில் அது கொள்ளும் ஒப்பனைகள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாதபடி வியப்பானவை.
ஒரு பழம் விழுங்கிய பறவை பல மரங்களை விதைத்துக் கொண்டு பறப்பதுபோல ஒவ்வொரு அத்தியாயங்களிலும் பல்வேறு சிந்தனைகளை போகிற போக்கில் நம்முள் விதைத்துச் செல்கிறார் ஆசிரியர் கோமகள் குமுதா.
வரலாறு என்பது ஓடும் ஆறு போன்றது. அதன் ஒரு கரையில் நின்று தன் கண்ணில் படுவதை மட்டும் எழுதாமல், அந்த ஆற்றில் குதித்து அதன் ஆழத்தில் யாரும் காணாதவற்றையும் கண்டு.. அதை தன் எழுத்துக்களில் காட்சிப்படுத்தி, படிப்பவரை ஒரு மாபெரும் சிலந்தி வலையைப் போல தன்வசம் இரண்டாவது முறையாக இழுத்து கொண்டுள்ளார் ஆசிரியர்.
முதல் நாவலில் கோவன் என்றால் இரண்டாவது நாவலில் ராணி மங்கம்மாள். இப்படி யாரும் எடுத்து எழுதாத ஆளுமைகளை எடுத்து தன் கற்பனையால் புது கதையை சொல்லுகிறார்.
இந்த நாவலில் வரும் போர் காட்சிகளும், அணிவகுப்பும், படை வியூகங்களும். அமரனின் ரணசிகிச்சை முறையும் படிக்கும் போது இதற்கு ஆசிரியர் எடுத்த களபணிகளையும் அதன் தீவிரமும் என்னை வியக்க வைக்கிறது.
ஆசிரியரின் கவிதை வளமும் இந்த நாவலில் நம் புருவத்தை உயர்த்துகிறது. உடலில் உள்ள ரோமங்கள் எல்லம் mr.ரோமியோ படத்தில் ஷாக் அடிச்ச வடிவேலுவின் தலை முடியைப் போல எழுந்து நிற்கிறது.
தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரம் தலைவியைப் பிரிந்த தலைவனின் துயரம், இவைகளை வைத்து குறுந்தினை பாட்டெல்லாம்... படிப்பவர்களுக்கு புரியும்படி தன் சொந்த கவிதைகளாக எழுதி இருக்கிறார்.
இதோ நூலில் இருந்து ஒரு பாடல்
"மருதப்பூ.
கண்ணீரில் கரைவதையும் நித்திரை மறந்த என் கண்களையும் யார் அறிவார்.
கார்கால நள்ளிரவில் ஈயின் இம்சை தாளாமல் எருது தலையசைக்கக் கழுத்து மணியின் சப்தம் கேட்கும் ஊர் உறங்கும் நடுச்சாம வேளையிலே ஒத்தையிலே நித்திரை இல்லாமல் தவிக்கிற என் தவிப்பை யார் அறிவார்."
எது எப்படி இருப்பினும் இந்த நாவலை படித்து முடித்த பிறகு நமக்குள் ஒரு பசுமை படரவிட்டு நம் நினைவில் நிலைத்து இருப்பது மங்களாதேவி மற்றும் மங்கா வின் இடையே உள்ள நட்பு மட்டுமே..!
✍️ கோடி

Comments
Post a Comment