ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

வாசிப்பு 9


ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

புதிதாக வாங்கிய மூன்று புத்தகங்கள் படிக்காமல் கிடக்கிறது. இருப்பினும் நான் கேட்டேன் என்பதற்காக, சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து நண்பர் ஒருவர் வாங்கி வந்து கொடுத்த இரண்டு புத்தகங்களில் ஒன்று இந்த "ஒரு புளியமரத்தின் கதை". அந்த நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த புத்தங்களை முதலில் படிக்க ஆரம்பித்தேன். அந்த நட்புக்கு என் நன்றி.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் முதல் நாவல், இந்தியாவிலேயே ஹீப்ரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ் நாவல், நான் முதல் முதலாக படித்த சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு புளியமரத்தின் கதை (என்ன ஒரு பொருத்தம்😀).

ஊருக்குள் இருக்கும் ஒரு புளியமரத்தின் கதையையும், அதை மையமாக வைத்து நிகழும் மனிதர்களின் வாழ்வியல், அரசியல், சூழ்ச்சிகளையும்... தள்ளி நின்று பார்த்து சொல்லும் ஒரு கதைசொல்லியாக காட்சிப்படுத்தி, வாசகர்களான நம்மை,புளியங்குளம் கிராமத்தின் வாசியாக மாற்றிவிடுகிறார் ஆசிரியர் சுந்தர ராமசாமி.

நாவலில் பலதரப்பட்ட மனிதர்கள் உலவினாலும், உடலில் பச்சை குத்தியது போல கடைசிவரை நமக்குள் நிலைத்து இருப்பவர் தமோதிர ஆசான் மட்டுமே.
மண்டபத்தின் முன் அமர்ந்து, ஈத்தாமொழி வெற்றிலையும், பச்சைப்பாக்கும், யாழ்ப்பாணம் நம்பர் ஒன் புகையிலையும் போட்டுத் துப்பிய பின், தொண்டையைச் செறுமிக் கொண்டு ஆர்ப்பாட்டமாய் அவர் ஆரம்பித்து சொல்கிற கதைகளில் கோணலும், நெளிசலுமான மன இயல்புகள் கொண்ட எத்தனைப் பாத்திரங்கள்? ஒரு மனிதனால் இத்தனைக் கதைகளைச் சுமக்க முடியுமா? என்றெல்லாம் நம் புருவங்களை உயர்த்த வைக்கிறார். இப்படிப்ப­ட்ட தாமோதர ஆசான்களை நம் வாழ்நாளில் கண்டும் காணாமல் எவ்வளவு முறை கடந்து வந்து இருப்போம்!

வேப்பம் பூவின் வாசம், தும்பை பூவின் தேன் போல, தாமோதர ஆசானும் அதிசயங்களுக்கு அப்பாற்பட்ட அதிசயம்தான். இந்த நாவல் புதியதாக பதிக்கப்படும் போதெல்லாம் தாமோதர ஆசானும் புதியதாக பிறந்து வருவார்.

ஏற்றத்தாழ்வு எதுவுமின்றி, ஒரு தாயின் கைகளைப்போல அனைவரையும் அரவணைத்த காற்றாடி மரத்தோட்டம் அழிக்கப்பட்டு, பூங்கா அமைக்கப்பட்டு... அங்கு வரும் குழந்தைகளிடம் காட்டப்படும் சாதிய வக்கிரங்கள், வளர்ச்சி என்ற பெயரில் நம் சுயத்தை இழந்து வருகிறோம், என்பதை பளாரென்று அறைந்து சொல்லுகின்றது.

நாம் எதையெல்லாம் முக்கியமெனத் தெரியாமல் தூக்கி எறிகிறோமோ, அதையெல்லாம் பின்னாளில் அடைவதற்குப் பெரிய விலை கொடுத்து வருகிறோம் என்பதையே காலம் திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறது!

தன்னலம் பாராமல் தன் கிளைகளையும், பழங்களையும், நிழலையும் பிற உயிர்களுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வந்த புளியமரத்தை தனியொரு மனிதனின் மேல் கொண்ட பலி உணர்விற்காக விஷம் கொடுத்து கொள்ளும் காட்சி, மனிதர்களின் மேல் நமக்குள் ஒரு பயத்தை விதைக்கிறது.

இந்த நாவல் 1966-ல் எழுதபட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அன்றைய மொத்த இந்தியாவையே நாகர்கோவில் வட்டார வழக்கில் நாகர்கோவில் தெருக்களைச் சுற்றி கதை அமைத்து, தன் வீட்டு வாசலில், தான் சுற்றித் திரிந்த வீதிகளில் தனக்குப் பரிச்சயமான மொழியின் ஊடாக நம் கண் முன் ஒரே நாவலில் கொண்டு வந்து விட்டார்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நாவல் இன்றைய காலகட்டத்துக்கும் அப்படியே பொருந்தும். புளியமரத்துக்கு பதிலாக வேறு ஏதாவது ஒன்று இருக்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம்.

கடைசிப் பக்கத்தில் நாகர்கோவில் வட்டார சொற்களுக்கு விளக்கம் கொடுத்து இருப்பது சிறப்பு.

இந்த நாவலைப் படித்து முடித்த பிறகு ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டிற்குச் சென்று, துக்கம் விசாரித்து வந்த உணர்வே என்னுள் ஏற்ப்பட்டது.

காலங்கள் மாறலாம், மனிதர்கள் மரணிக்களாம், நிகழ்வுகள் மறக்கலாம். ஆனால், நாம் வாழ்ந்த வாழ்வின் அடையாளங்கள் மட்டும், என்றும் நினைவுச் சின்னமாய் நிலைத்து நிற்கும். புளியமரம் இருந்த இடம் சூனியமான பிறகும், அந்த இடத்தின் பெயர் "புளியமரம் ஜென்சன்" தான்..!!

✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு