நீ இன்றி அமையாது உலகு (பாகம் 2) - முகில்

வாசிப்பு 8

நீ இன்றி அமையாது உலகு  (பாகம் 2) - முகில்


ஒரு திறமைசாலியே தான் ஒரு திறமைசாலி என்று உணர்ந்தாலும்,  அவனை நம்பி செயல்படவிடாமல், உன் திறமை ஒரு குப்பைக்குச் சமானமென்று மட்டம் தட்டி, அவர்களை சாதனையாளர்களாக மாறவிடாமல் , தனக்கு வேண்டிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் கங்கானிகள் சூல் உலகு இது. அந்த தந்திர கங்கானிகளை தன் ஆசிரியராக ஏற்று, தன் சொந்த திறமைகளை பலியாக்கி கொண்டவர்கள் இங்கே ஏராளம்.

ஒரு நல்ல வாய்ப்பு, அந்த திறமைசாலிகளுக்கு வரும் தருணத்தில் "அவசரப்படாதே, இன்னும் கொஞ்சம் திறமையை வளர்த்துக்கொள்" என்று மூளைச் சலவை செய்யப்படுகிறது. அதையும் மீறி சில சாதனையாளர்களை முன் மாதிரியாக கொண்டு அவர்கள் வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்தால்,
"தோகை மயிலை கண்டு வான்கோழி சிறகை விரிச்ச மாதிரி"
"புலியைப் பார்த்து புனை சூடு போட்டு கொண்ட கதை மாதிரி" போன்ற இலக்கிய மொழிகளை ஆயுதமாக்கி அடக்கி ஒடுக்குகிறார்கள்.

இது போன்ற எண்ணற்ற தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, தங்களுக்கென புதிய பாதைகளை வகுத்தவர்களின் உண்மை கதைகள்..  நாம் போடப் போகும் புத்தம் புதிய பாதைகளுக்கு, ஒரு தீ குச்சியை கொளுத்தி ஒளி கொடுக்கின்றன.

வெற்றி பெற்ற ஒருவர் கடந்து வந்த பாதை, நம் வாழ்விலும் வெற்றிக்கான பாதையாக அமையுமா?
 உண்ட உடனே செரித்து, நம் உடலுக்கு பலம் சேர்க்க கூடிய உணவு என்றால் அது தேன் மட்டுமே. அதற்கு முக்கியமான காரணம், அதை அந்த தேனி ஏற்கனவே செரித்துவிட்டது தான். அந்த தேனியைப் போல தன் வாழ்க்கையை அமைத்து கொண்ட மனிதர்களில், 24 பேர்களை தேர்வுசெய்து அவர்களின் அனுபவத் தேனை, ஒன்று கூட்டி "நீ இன்றி அமையாது உலகு- பாகம் 2" என்னும் சமப்பந்தி போஜனமாக பரிமாறுகிறார் எழுத்தாளர் முகில்.

அந்த தேன் நம்முள் கலந்து, சோர்ந்துபோய் அமர்ந்து இருக்கும் உள்ளங்களில் ஊக்கம் ஏற்றி, அடைக்கப்பட்ட வெற்றியின் கதவுகளை உடைத்து கொண்டு, உள் நுழையும் ஆற்றலையும், பலத்தையும்... நம்முள் விதைகளாய் விதைத்துச் செல்கிறது.

தன் உண்மையான பலம் புரியாமல், பாகன் சொல்லுவதே வேதவாக்கென்று கருதி, ஒரு சிறு சங்கிலிக்குள் அடைபட்டு வாழும் யானையைப் போன்ற திறமைசாலிகளுக்கு, கண்டிப்பாக பரிசளித்து, படிக்க வைக்க வேண்டிய புத்தகம்.. இந்த "நீ இன்றி அமையாது உலகு பாகம் 2".


✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு