வைரமுத்து சிறுகதைகள்

வாசிப்பு 5


வைரமுத்து சிறுகதைகள்

(2019 அம் ஆண்டு நான் வாசித்த கடைசி புத்தகம்)

தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலில் உள்ள யானை-காளை சிற்பத்தை பார்த்து உள்ளீர்களா..
பார்த்தவர்கள் அதில் "யானை தலைக்குப் பின்னே காளை தலை உள்ளதா? அல்லது காளை தலைக்குப் பின்னே யானை தலை உள்ளதா?" என்று குழம்புவதைப் போல "சிறுகதைக்குள் கவிதை உள்ளதா.. அல்லது, கவிதை கொண்டு சிறுகதை படைக்கப்பட்டதா.." என்ற குழப்பம், புத்தகத்தைப் படித்து முடிக்கும் வரை "தோண்டத் தோண்ட ஊறும் நீர் போல" என்னுள் ஏற்பட்டு கொண்டே இருந்தது....! கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவிஞானி மட்டும் அல்ல குழப்பவாதியும் கூட !

கவிப்பேரரசு அவர்கள் எழுத்துலகில் கவிதை, நாவல், கட்டுரை முதற்கொண்டு அனைத்து வகையான எழுத்தையும் தன் பேனாவால் ஆளுமை செய்தார். ஆனால், சிறுகதை என்ற பகுதியை மட்டும் தொடாமல் விட்டார், சிறுகதை அரசன் ஜெயகாந்தன் மேல் உள்ள பிரியத்தால்.

ஜெயகாந்தன் தன் எழுத்தையும், மூச்சையும் நிறுத்திய அதே ஆண்டில்தான் (2015) சிறுகதைகள் பக்கம் தன் பேனா முனையைத் திருப்பினார், குமுதம் வார இதழ் மூலமாக. அதன் 40 சிறுகதைகள் கொண்ட தொகுப்புதான் இந்நூல்.

ஒவ்வொரு கதையும் தனிரகம் எழுத்து நடையோ தனிவிதம். வாராவாரம் முடிக்க வேண்டுமே என்ற அவசரம் கதையின் வேகத்தில் பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து கதைகளின் முடிவுகளும் நம் கண்ணீரால் புத்தகத்தை நனைக்கின்றது.(தவிர்த்து இருக்கலாம்)

எச்சரிக்கை :- தனிமையில் இருப்பவர்கள் யாரும் 19வது கதையான "மனிதர்களால் ஆனது வாழ்வு" கதையை மட்டும் படிக்காமல், பக்கங்களை கடந்து 20வது கதைக்கு சென்று விடுங்கள். மீறிப் படித்தால், அதன் கடைசி வரிகளில் உங்கள் இதயம் நொறுங்குவதையும், ஒரு இனம்புரியாத பயம் உங்களைச் சூழ்வதையும் தவிர்க்க இயலாது.

தமிழகமே வாசிப்போம்

✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு