சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி

வாசிப்பு 3


சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி

இது மனித குலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு. அப்படித்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர் இதற்கு பெயர் வைத்துள்ளார். ஆனால், இது சுருக்கமான வரலாறு போலத் தெரியவில்லை. அப்படியே இது சுருக்கம் என்றாலும், இதுவே இவ்வளவு ஆச்சரியங்களை நமக்கு அளிக்கிறேதே, இதன் விரிவாக்கம் என்னன்ன விளைவுகளை நமக்குள் ஏற்படுத்தும் என்று கற்பனை செய்துகூடப் பார்க்க இயலவில்லை.

ஆரம்பத்தில் இந்த புத்தகத்தை pdf ல் தான் படிக்க ஆரம்பித்தேன். ஒன்றிரண்டு பக்கங்கள் படித்தப் பிறகு, இது சாதாரணமான புத்தகம் கிடையாது, இதை pdfல் படிப்பது கூடாதென்று முடிவு செய்தேன். அதே சமயத்தில் நடிகர் திரு.கமலஹாசன் அவர்கள் ஒரு கட்டுரையில் இந்த புத்தகத்தைப் பற்றி பெருமையாக பதிவு செய்திருந்தார். உலக விடயம் அனைத்தும் தெரிந்து வைத்திருக்கும் உலகநாயகன், இந்த புத்தகத்தை வியக்கிறார் என்றால் அப்படி இதில் என்ன இருக்கிறது! இதை வாங்கி படித்தே ஆகவேண்டும் என முடிவு செய்து 20/09/2019 அன்று வாங்கி வாசிக்கத் தொடங்கினேன்.

மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் பெருகி வருவதைப் போல, இந்த புத்தகத்தைப் படிக்கப் படிக்க தகவல்கள் பெருகி வருகின்றது. இந்த புத்தகம் ஐந்து வருடங்களுக்கு முன்னால் எனக்குக் கிடைத்திருந்தால் என் பலக் கேள்விகளுக்கு விடை எப்பொழுதோ கிட்டி இருக்கும். அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ஏனென்றால், இதைப் படித்திருந்தால் குரான், பைபிள், பகவத்கீதை போன்றவற்றை தொட்டுக்கூட பார்த்திருக்க மாட்டேன். இந்த புத்தகத்துக்கு விமர்சனம் எழுத நினைக்கும் போதே ஒரு குழப்ப சூழ்நிலைக்கு ஆளானேன். எதை எழுதுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. அதனால், இதில் வேளாண் புரட்சியை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.

இந்த புத்தகத்தை நீங்கள் வேண்டா விருப்பாக படிக்க தொடங்கினாலும், அதைக் கீழே வைக்கவே உங்களுக்கு மனம்வராது. இது மனித இனத்தின் கதை. குரங்கிலிருந்து வந்த அவன், எப்படி இந்த உலகத்தையே ஆட்டி படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்தான், என்பதை சுவாரசியமாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் சுருக்கமாக விரித்துக் கூறுகிறார் யுவால் நோவா ஹராரி. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதை நாம் உணராத வண்ணம் மொழி பெயர்த்துள்ளார் திருமதி.நாகலட்சுமி சண்முகம்.

இந்த புத்தகம் மனிதகுல வரலாற்றை அறிவுப் புரட்சி, வேளான் புரட்சி, மனிதகுல ஒருங்கிணைப்பு, அறிவியல் புரட்சி என நான்கு பகுதிகளாக பிரித்துக் கூறுகிறது. இன்று நமக்குள் இருக்கும் பல நம்பிக்கைகளை இந்த புத்தகத்தின் மூலம் தகர்த்து எறிகிறார் ஹராரி.

விவசாயம்தான் நம் பண்பாடு என்று, இன்று நாம் கூறிக் கொண்டுள்ளோம். ஆனால், அந்த விவசாயம்தான் உலக அழிவுக்கு முதல் காரணம் என்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கின்றது. "நம்முடைய மூதாதையர், இயற்கையோடு இணக்கமாக வாழ்த்தனர்" என்று கூறுகின்ற சுற்றுச்சுழல் ஆர்வலர்களை நம்பாதீர்கள். தொழிற் புரட்சிக்கு முன்பாகவே, பெரும்பாலான தாவர இனங்களையும், விலங்கு இனங்களையும் அழிவு நிலைக்கு கொண்டு போய்ச் சேர்த்தப் பெருமை ஹோமோ சேப்பியன்ஸ்க்கு இருந்தது. இந்த புவியிலேயே மிகக் கொடூரமான இனம் நாம் தான் என்று உயிரியல் நிகழ்வுகளின் பதிவுகள் கூறுகிறது.

ஒரு சுலபமான வாழ்க்கையைத் தேடிப்போய் அதிக இன்னல்களை கொண்டு வந்த கதை இது. அது இன்றும் தொடர்கதையாக தொடர்கிறது. வேட்டையாடியாக மனிதன் இருந்த போது அவனது ஆடுகளம் மிகப் பெரியதாக இருந்தது. பல உணவுகளை உண்டு பலத்தோடு வாழ்ந்தான். எதிர்காலதத்தைப் பற்றிய கவலையே அவனுக்கு கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எதிர்காலம் மற்றும் கவலை என்பது என்னவென்றே அவனுக்குத் தெரியாது. உணவைத் தேடி சேகரிப்பது மட்டுமே வேலையாக இருந்தது. விவசாயத்தால் அவனது ஆடுகளம் சுருங்கியது. ஒரே ஒரு உணவுப் பொருளை மட்டும் நம்பியிருக்க ஆரம்பித்தான். அதனால் ஊட்டசத்துக்கள் குறைந்து பலம் இழந்தான். எதிர்காலத்தின் உணவு பற்றிய பயம் அவனுக்குத் தோன்றியது. அதனால், மனிதன் சுயநலவாதியாக மாறத் தொடங்கினான்.

வேளாண்மை ஏற்படுத்திய அழுத்தம் நீண்டகாலப் பின்விளைவுகளைக் கொண்டிருந்தது. பெரிய அளவில் அரசியல் அமைப்பு முறைகளும்,
சமூக அமைப்பு முறைகளும் உருவாவதற்கான அடித்தளமாக அது
அமைந்தது. இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால், கடின
உழைப்பாளிகளான அந்த விவசாயிகள், நிகழ்காலத்தில் கடினமாக உழைத்ததன் மூலம் எந்த எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பைப் பெற விரும்பினார்களோ, அவர்களுக்கு அது ஒருபோதும் கிடைக்கவே இல்லை. எல்லா இடங்களிலும் ஆட்சியாளர்களும் மேட்டுக்குடியினரும் முளைத்து, அந்த விவசாயிகளுக்குத் தேவையான குறைந்தபட்ச உணவை மட்டும் விட்டுவிட்டு, உபரி உணவு முழுவதையும் அபகரித்துக் கொண்டனர். விவசாயிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட அந்த உபரி உணவுதான்
அரசியல், போர், கலை, தத்துவம் ஆகியவற்றை முடுக்கிவிட்டது.அரண்மனைகள், கோட்டைகள், நினைவுச்சின்னங்கள், கோவில் ஆகியவற்றை மேட்டுக்குடியினர் கட்டினர். சமீபத்திய காலகட்டம்வரை சமுதாயத்தின் 90 சதவீதத்திற்கும் அதிகமான மனிதர்கள் விவசாயிகளாகத்தான் இருந்தனர். அவர்கள் தினமும் காலையில் கண் விழித்து, வியர்வை சிந்தித் தங்கள் நிலத்தை உழுதனர். அவர்கள் உற்பத்தி செய்த உபரி உணவுதான் அரசு அரசாங்க அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மதகுருமார்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேட்டுக்குடினரின் பசியைப் போக்குவது. வரலாற்று நூல்கள் நெடுகிலும் மேட்டுக்குடியினரும் இடம்பெற்றுள்ளனர்.

பெரும்பான்மை மக்கள் வயல்களை உழுது கொண்டு, தண்ணீர் வாளிகளைச் சுமந்து கொண்டும் இருந்த நேரத்தில், ஒரு சிலர் மட்டுமே செய்து வந்துள்ள ஒரு விஷயம்தான் வரலாறு ஆகும். தற்கால மனிதர்களாகிய நாம், கற்கால மனிதர்களை விட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை. நம் மூதாதையரின் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர்.

தமிழகமே வாசிப்போம்

✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு