கௌசிகா- கோமகள் குமுதா









வாசிப்பு 12



கௌசிகா- கோமகள் குமுதா

பொதுவாக தமிழ் சரித்திர நாவல் என்றால் சேர, சோழ, பாண்டிய அரசுகளையும் அவர்களின் நாடுகளையும், வீர தீர பிரதாபங்களையும் சுற்றியே  கதை எழுதப்படும். ஆனால், எழுத்துலக வரலாற்றில்  முதன்முறையாக கொங்கு நாட்டையும், அதன் அரசன் கோவனையும் மையமாக வைத்து ஒரு சரித்திரத்தை படைத்து உள்ளார் ஆசிரியர் "கோமகள் குமுதா"(எங்கள் கோவையின் மகள்). அவர்களின் இந்த முதல் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ரம்யா ரவிக்குமார் க்கு என் நன்றி.

ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அது நமக்கு புதிய அனுபவங்களையும் புதிய தகவல்களையும் தர வேண்டும். அப்படிபட்ட ஒரு புனைவு நாவல் தான் இந்த கௌசிகா..!. நான் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடிய ஊர்களைப் பற்றி நான் அறியாத பல தகவல்களையும் அதன் பழைய பெயர்களையும், பெயர் காரணத்தையும் இந்த புத்தகம் எனக்கு கற்பிக்கும் போது  என் வீட்டில் இருந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் பொன்னூத்து மலையின் உச்சியில் அமர்ந்து இருப்பதுபோல ஒரு உணர்வு என்னுள் படர்ந்தது.

கௌசிகா என்ற நதி கோவையில் ஓடி தாகம் தீர்த்தது என்று இந்த புத்தகத்தை வாசிக்கும் வரை சத்தியமாக எனக்கு தெரியாது.(இதற்க்கும் நான் கோவைக்காரன்🙈) இப்படி ஒரு நதியை பாதுகாக்க தவறிய நம் முன்னோர்களுக்காக, நாம் இயற்கையின் முன் வெக்கி தலைகுனிய வேண்டும். சரி நாவலுக்கு வருவோம்...

கோவன் மற்றும் கோவையைச் சுற்றி உள்ள ஊர்களைத் தவிர மற்ற அனைத்தும் கற்பனை. ஆனால், இந்த நாவலை படித்து முடித்த பிறகு அதை நம்ப மறுக்கிறது என் மனது. அப்படியொரு நேர்த்தியான எழுத்துநடை. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும், ஊர்களையும் கச்சிதமாக பொருத்தி  உண்மையான வரலாறு போல நமக்கு ஒரு பிரம்மையை உண்டாக்குகிறது இந்த நாவல்.

ஒரு  எழுத்தை  சினிமாப்படம் போல நம் கண்முன் காட்சிபடுத்துவது என்பது மிகப் பெரிய கலை. அது மிகப்பெரிய வரம். அதை கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் ஆசிரியர்க்கு குறைவு இல்லாமல் வழங்கி உள்ளாள். கோவன் வேங்கை புலி உடன் போடும் சண்டை, பீமசேனனுடன் புரியும் மற்போர் காட்சி, கோவனுக்கும் நிலன் என்ற புரவிக்கும் உள்ள நட்பு மற்றும் உரையாடல், இயnற்கை வர்ணிப்புங்கள், காதல் காட்சிகள் இன்னும் பல  இடங்களில் அந்த வரத்தின் பயன் நமக்கு தெரிகிறது.

இந்த நாவல்  வருங்காலத்தில் வருபவர்களுக்கு நாம் விட்டு செல்லும் கொங்குநாட்டை பற்றிய மிக பெரிய தடயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், சில இடங்கள் சலிப்பூட்டி படிக்கும் ஆர்வத்தை குறைக்கின்றது என்பதை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்.

*ஒருவருக்கு பல இடங்களில்  அறிமுகங்களை தவிர்த்து இருக்கலாம். புதிய கதாபாத்திரம் வருகிறதோ என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போது, அது பழைய கதாபாத்திரம் தான் என்று தெரியும்போது எனக்கு ஆர்வம் போய் கொட்டாவி தான் வந்தது.

*நாவல் முழுவதும் வரும் என்று எதிர்பார்த்த சில கதாபாத்திரங்கள் இரண்டு, மூன்று அத்தியாயங்களில் நிறுத்தப்பட்டது ஏமாற்றத்தை அளித்தது. உதாரணம், மங்கல தேவி மற்றும் குமணன்.

*இன்னும் பல கதாபாத்திரங்கள் சீரியலில் வருவது போல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு திடீரென்று  காரணமே இல்லாமல் மறைந்து போவது படிப்பவற்கு அழுப்பை உண்டாக்குகிறது.

*சொல்லி வைத்து போல இளவரசர்களின் தந்தைகள்  இறப்பது கொஞ்சம் நாடகத்தனம்.

*சில காட்சிகள் பக்கங்கள் நிறைப்பதற்காக எழுதப்பட்டது போல உள்ளது. முக்கியமாக, அழகு பற்றியே வர்ணிப்புகள்.

இது ஆசிரியரின் முதல் நாவல்போல தெரியவில்லை. படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கவே மனம் வரவில்லை. ஒவ்வொன்றையும் வரலாற்று ரீதியாக ஆராய்ந்து எழுதி உள்ளார் ஆசிரியர் "கோமகள் குமுதா".

✍️ கோடி 

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு